பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்போர் மீது நடவடிக்கை ; கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்போர் மீது நடவடிக்கை ;
கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை : ''தேச பாதுகாப்பிற்கும், மாநில பாதுகாப்பிற்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்போர் மீது நடவடிக்கை ; கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு


கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மாவட்டத்தில் நடைபெறும், அனைத்து நிகழ்வுகளுக்கும், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தான் பொறுப்பு.

கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் இருவரும், இரு துருவங்கள் போல் இல்லாமல், இரு கண்களைப் போல், ஒருங்கிணைந்து செயல்பட்டால், சட்டம் - ஒழுங்கை, மேலும் சிறப்பாக பேணிக்காக்க இயலும்.

காவல் துறை மற்றும் வருவாய் அலுவலர்கள், தங்கள் பகுதிகளில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து, உயர் அதிகாரிகளுக்கு, உடனுக்குடன் தெரிவிப்பதை, தங்களுடைய முக்கியப் பணியாக கருத வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் முன், அதற்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதமும், இடதுசாரி தீவிரவாதமும், சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களை எடுக்க வேண்டும்.

அழிவு சக்திகளை கட்டுப்படுத்தி, மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன், அனைவரும் செயல்பட வேண்டும். ஜெ., வழியில் நமது மாநிலம் தொடர்ந்து, அமைதிப்பூங்காவாக விளங்கும் வகையில், பணியாற்ற வேண்டும்.

தேச பாதுகாப்புக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கைகளை, உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

ஜாதி மோதல்கள் ஏற்படக்கூடிய, பதற்றமானப் பகுதிகளை, கலெக்டர்களும், போலீஸ், எஸ்.பி.,க்களும், தங்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள், எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

உங்களுடைய வாராந்திர சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், இதை முக்கிய பொருளாக, விவாதிக்க வேண்டும்.

நல்லிணக்க கூட்டங்களை, அவ்வப்போது நடத்த வேண்டும். ஜாதி தீயை துாண்டிவிட்டு, குளிர்காய நினைக்கும், சமூக விரோத கும்பல்களைக் கண்டறிந்து, வேற்றுமைகளைக் களைந்து, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.


வழிப்பறி, கொள்ளை, நகை பறிப்பு ஆகிய, குற்ற செயல்களை வளரவிடாமல் தடுப்பதற்கு, காவல் துறையினர், ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில், கண்காணிப்புப் பணிகளை, காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியும், குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

முன்விரோதம் மற்றும் தொழில் தகராறு காரணமாக, மர்ம நபர்களால் நடத்தப்படும், படுகொலை சம்பவங்களை ஒடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இளைஞர்கள் இடையே, தற்போது புதிதாக தலையெடுத்துள்ள, கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி, பொது மக்களை அச்சுறுத்தும் கலாசாரத்தை, முற்றிலுமாக ஒழிக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

போதை பொருள் விற்பனைக்கு போலீசாரே பொறுப்பு


முதல்வர் பழனிசாமி பேசியதாவது: போக்குவரத்து காவலர்கள், பணியில் சிரத்தையுடன் ஈடுபடுவதை உறுதி செய்ய, காவல் துறை உயர் அதிகாரிகள், அவ்வப்போது மேற்பார்வை செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்க, தனியார் பங்களிப்புடன், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

கந்துவட்டி புகார்கள் மீது, அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நம்பர் லாட்டரி, இணையதளம் வழி சூதாட்டம், குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை போன்றவற்றை தடுக்க, கடும் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

பொருளாதாரக் குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், ஜாதிய ஆணவக் கொலைகள் போன்ற குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான, வன்கொடுமை புகார்களைப் பதிவு செய்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கோவில் பாதுகாப்பில், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement



சைவமும், அசைவமும்

காலை, 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம், 1:30 மணிக்கு நிறைவடைந்தது. அனைவருக்கும், மதிய உணவாக, சைவம் மற்றும் அசைவம் வகைகள் பரிமாறப்பட்டன. உணவு இடைவேளை முடித்து, மாலை, 3:00 மணிக்கு, மீண்டும் கூட்டம் துவங்கியது. காலையில், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றினார். டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து பேசினார். பின், மாவட்ட வாரியாக, கலெக்டர்கள் மற்றும் போலீஸ், எஸ்.பி.,க்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.


'செம்மரம் வெட்டும் கூலிகளுக்கு மறுவாழ்வு'


l கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ், எஸ்.பி.,க்கள் - கமிஷனர்கள் தனித்தனியே பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், தங்கள் மாவட்ட தேவைகளை பட்டியலிட்டனர்
l கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று முன்தினம், பேசிய தலைமை செயலர், 'மாநாட்டில், ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும்; முக்கிய தேவைகளை மட்டும் குறிப்பிட வேண்டும்' என, அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அதிகாரிகள் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பட்டியலிட் டனர்
l போலீஸ், எஸ்.பி.,க்கள் பேசுகையில், 'காவல் நிலையம் வேண்டும்; காவலர்களுக்கு குடியிருப்பு வசதி வேண்டும்' என, வலியுறுத்தினர்
l 'பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, உள்ளாட்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை, செயல்படுத்தப்படாமல் உள்ளது. காவல் துறை சார்பில் மட்டும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. உள்ளாட்சி துறை சார்பிலும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர்
l திருவண்ணாமலை கலெக்டர் மற்றும்,எஸ்.பி., பேசுகையில், 'கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்ட, வெளி மாநிலங்களுக்கு செல்வதை தடுக்க, அவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். இது தொடர்பான அறிவிப்பை, மாநாடு நிறைவு நாளில், முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement