உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச, தமிழகம் உள்ளிட்ட, நான்கு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.மத்திய நீர்வள ஆதாரத் துறை சார்பில், டில்லியில், வரும், 9ம் தேதி, இதற்கான கூட்டம்நடத்தப்படுகிறது. அதில், இப்பிரச்னை குறித்து பேசி தீர்வு காண, மத்திய அரசு முன்வந்து உள்ளதால், தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
'ஆறு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், பிப்., 16ல் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, பிப்., 22ல், தமிழக அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அதில், அனைத்து கட்சி தலைவர்கள் குழு, டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
ஆலோசனை
பிரதமரை சந்திப்பதற்கு முன், மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரை சந்திக்கும்படி, தமிழக
அரசுக்கு, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இது குறித்து, முதல்வர் பழனிசாமி, மார்ச், 3ல், எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலினுடன் ஆலோசித்தார். ஆலோசனைக்கு பின், 'அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க, பிரதமர் மறுப்பது, தமிழகத் திற்கே அவமானம்' என, ஸ்டாலின், கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
அதை மறுத்த அமைச்சர், ஜெயகுமார், 'பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை. முதலில், நீர்வள ஆதாரத் துறை அமைச்சரை சந்திக்கும்படி தான் அறிவுறுத்தி உள்ளனர்' என்றார். இது, தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள சூழலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், நேற்று லோக்சபாவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய நீர்வள ஆதாரத் துறை, காவிரியால் பயன் பெறும், கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை, மார்ச், 9ல், டில்லியில் நடக்கும் பேச்சுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. அதில் பங்கேற்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: வரும், 9ம் தேதி, பகல், 12:00 மணிக்கு, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த, தலைமை செயலர்கள், துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஸ்தம்பிப்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக, இக்கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பில், அரசின் தலைமை செயலர், பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பங்கேற்க உள்ளனர்.
மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கிற அரசு இது. மாநிலத்தின் ஜீவாதார உரிமைகளை பெற, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபாவை ஸ்தம்பிக்க வைத்தனர்.
எந்த நிலையிலும், மாநில உரிமையை விட்டுக் கொடுக்க, நாங்கள் தயாராக இல்லை. உரிமையை பெற, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, அதை நடைமுறைப்படுத்த வேண்டியது, சம்பந்தப்பட்ட துறையின் கடமை.
எனவே, நீர்வள ஆதாரத் துறை, தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என, நம்பிக்கை உள்ளது. பிரதமரிடம் சென்றாலும், மத்திய நீர்வள ஆதாரத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, அந்த துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
'ஆறு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என, தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி, ஆறு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1+ 30)
Reply