ஐதராபாத் : ''பா.ஜ.,வும், காங்.,கும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க தவறி விட்டன; எனவே, நம் நாட்டு அரசியலின் தரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' எனக் கூறியுள்ள, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், இந்த கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்கும் வகையில், பிற கட்சிகளின் தலைவர்களை சந்திக்க திட்டம் வகுத்து வருகிறார்.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகர ராவ், 64, முதல்வராக உள்ளார். 2019ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 'பா.ஜ., மற்றும், காங்., ஆகிய கட்சி களுக்கு மாற்றாக, மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என, சந்திரசேகர ராவ் வலியுறுத்தி வருகிறார்.
தீவிரம்
பா.ஜ., - காங்., கட்சி கள், மக்கள் பிரச்னைகளை தீர்க்க தவறி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள, சந்திரசேகர ராவ், அக்கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாம் அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, இந்திய அரசியலின் தரத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டிய அவசியம் வந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, அவர்களது ஆதரவை கேட்க திட்டமிட்டுள்ளார்.
ஆலோசனை
இதைத் தொடர்ந்து, தேசிய அளவிலான பிரச்னைகளை சரியான முறையில் புரிந்து கொள்ள, ஊடக நிறுவனங்கள், தொழில் துறை, தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன், சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்துவார்.
இந்த சந்திப்புகளின் அடிப்படையில், மூன்றாவது அணி அமைப்பதற்கான திட்டத்தை, அவர் வகுப்பார்.மூன்றாவது அணி அமைப்பதற்கான சந்திப்பு கூட்டங்கள், ஐதராபாத், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடக்கும்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர், ஹேமந்த் சோமன், தெலுங்கானா முதல்வரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர், அசாதுதீன் ஒவைசி, ஜனசேனா கட்சித் தலைவர், பவன் கல்யாண், மஹாராஷ்டிராவை சேர்ந்த இரு, எம்.பி.,க்கள் உட்பட, பல தலைவர்கள், சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்தாண்டு, உ.பி.,யில், முதல்வராக, யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வராக, கேசவ் பிரசாத் மவுர்யாவும் பொறுப்பேற்றதை தொடர்ந்து, கோரக்பூர், புல்புர் லோக்சபா தொகுதிகளின், எம்.பி., பதவிகளை, அவர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், இந்த தொகுதிகள் காலியாக உள்ளன. கோரக்பூர், புல்புர் லோக்சபா தொகுதிகளுக்கு, 11ல், இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, லோக்சபா இடைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக, நேற்று அறிவித்தார். ''சமாஜ்வாதி கட்சிக்கு அளித்துள்ள ஆதரவு, இடைத் தேர்தலுக்கு மட்டுமே; 2019 பொதுத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியாக இதை கருத வேண்டாம்,'' என, மாயாவதி தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து