புதுடில்லி : மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், திரிபுராவில் ஆட்சி அமைப்பதுடன், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி அரசு அமைக்க, மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், மொத்தமுள்ள, 31 மாநிலங்களில், 21 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி அரசுகள் அமைய உள்ளன.
மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 25 ஆண்டுகளாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திரிபுராவில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக, அங்கு ஆட்சி அமைக்க உள்ளது.
21 மாநிலங்கள்:
இதுதவிர, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பும்,
பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நேரத்தில், 21 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமைய உள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை, நான்காக குறைந்துள்ளது.
'அடுத்ததாக, விரைவில் தேர்தல் நடக்க உள்ள, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, எங்களின் இலக்கு' என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், பா.ஜ., தலைவர், அமித் ஷா கூறியுள்ளனர். ஏற்கனவே வடக்கு, வட கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி அரசு அமைந்துள்ளது. அடுத்ததாக, தென் மாநிலங்களை குறிவைத்துள்ளது.
மிகப் பெரிய வளர்ச்சி:
மோடி மற்றும் அமித் ஷா கூட்டணியில், நான்கு ஆண்டுகளில், பா.ஜ., மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலின்போது, ஏழு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி இருந்தது. தற்போது, அது, 21 ஆக உயர்ந்துள்ளது. திரிபுராவில் அரசு பொறுப்பேற்ற பின், 17 மாநிலங்களில், பா.ஜ., முதல்வர்கள் இருப்பர், வரும், 2019 லோக்சபா தேர்தல் மற்றும் விரைவில் நடக்க
உள்ள, கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளதாக, அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு :
சமீபத்தில், குஜராத் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி மற்றும் அதைத் தொடர்ந்து, சில மாநில சட்டசபை இடைத்தேர்தல் வெற்றிகள், காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், இந்த மூன்று மாநிலத் தேர்தல் முடிவு, தேசிய அரசியலை புரட்டி போட்டுள்ளது. இதன்மூலம், 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற, பா.ஜ., தலைவர்களின் கோஷம், சாத்தியமாக வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply
Reply