மும்பை : துபாயில் உயிரிழந்த, பிரபல பாலிவுட் நடிகை, ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து, அவரது கணவர், போனி கபூர், மனந்திறந்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
நடிகை, ஸ்ரீதேவி, 54, சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் மரணம் அடைந்தார். அதுகுறித்து, அவரது கணவர், போனி கபூர் கூறிய விஷயங்களை, திரைத்துறை வர்த்தக விமர்சகர், கோமல் நாஹ்தா, இணையதள, 'ப்ளாக்'கில், பகிர்ந்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ள தாவது: துபாயில், தன் உறவினரும், நடிகருமான, மோஹித் மார்வாவின் திருமணம் முடிந்த பின், தன் மகள், ஜான்வி விரும்பும் பொருட்களை வாங்குவதற்காக, துபாயில் மேலும் இரு நாட்கள் தங்க திட்டமிட்டார், ஸ்ரீதேவி. இதற்கிடையே இந்தியா திரும்பிய, போனி கபூர், 62, ஸ்ரீதேவிக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் எண்ணத்தில், மீண்டும் துபாய் சென்றார்.
முன்னதாக, பிப்., 24ம் தேதி காலை, ஸ்ரீதேவியுடன் தொலைபேசியில், போனி கபூர் பேசிஉள்ளார். அப்போது, 'பாபா, நீங்கள் என்னுடன் இல்லாதது, வருத்தமாக உள்ளது' என, போனி கபூரிடம், ஸ்ரீதேவி கூறியுள்ளார். அன்று மாலை, துபாய் வருவது பற்றி, போனி கபூர் சொல்லவில்லை. பிற்பகல், 3:30 மணிக்கு, விமானத்தில் ஏறிய போனி கபூர், மாலை, 6:20க்கு துபாய் சென்றடைந்தார்.
ஸ்ரீதேவி தங்கியிருந்த, ஓட்டல் அறைக்கு சென்ற போனி கபூர், டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி, அந்த அறைக் கதவை திறந்தார். கணவரை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்த ஸ்ரீதேவி, அவரை தழுவி முத்தமிட்டார்; அரை மணி நேரம், அவர்கள் பல்வேறு விஷயங்களை பேசி மகிழ்ந்தனர்.
பின், இரவு விருந்துக்கு வெளியில் செல்ல, தன் மனைவியை, போனி கபூர் அழைத்தார். இதையடுத்து, இரவு விருந்துக்கு செல்ல முடிவு செய்த ஸ்ரீதேவி, முன்னதாக குளித்து விட்டு வர விரும்பினார்.
ஹாலில் போனி அமர்ந்திருக்க, பிரமாண்ட குளியலறைக்கு சென்றார், ஸ்ரீதேவி. 20 நிமிடங்கள், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்த போனி, சனிக்கிழமைகளில், ஓட்டல்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், ஸ்ரீதேவியை விரைவு படுத்த நினைத்தார்.
குளியல் அறை அருகே சென்று, வேகமாக வரும்படி குரல் கொடுத்தார்; பதில் வராததால், கவலையும், பயமும் அடைந்த அவர், கதவை திறக்க முயன்றார். உள்பக்கம் தாழிடப்படாததால், கதவு உடனே திறந்தது.
உள்ளே, போனி பார்த்த காட்சி, அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. குளியல் தொட்டியில், நிரம்பிய நீரில், உடல் முழுவதும் மூழ்கிய நிலையில் கிடந்தார், ஸ்ரீதேவி. திகிலடைந்த போனி, சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று, சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த, நடிகை, ஸ்ரீதேவி, மரணத்தை தழுவியிருந்த காட்சியால், போனி கபூர், உருக்குலைந்து போனார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து