ஷில்லாங் : வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சங்மா மகன், கான்ராட் சங்மா, 40, தலைமையிலான, என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. இரு அணிகளுக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், யார் ஆட்சி அமைக்கப் போகின்றனர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், மேகாலயாவில் மொத்தமுள்ள, 60 தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், ஆளும் காங்கிரஸ், 21 இடங்களில் வென்றது.
மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணியில் உள்ள, என்.பி.பி., எனப்படும், தேசிய மக்கள் கட்சி, 19 இடங்களிலும், பா.ஜ., இரண்டு இடங்களிலும் வென்றன. பிற கட்சிகள், 14 தொகுதிகளிலும், மூன்று தொகுதிகளில் சுயேச்சைகளும் வென்றனர்.
தொடர்ந்து, 10 ஆண்டு கள் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மேகாலயாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. பெரும்பான்மைக்கு, மேலும், 10 பேரின் ஆதரவு அந்தக் கட்சிக்கு தேவை. இந்நிலையில், ஆறு தொகுதிகளில் வென்ற, யு.டி.பி., எனப்படும் ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி மற்றும், நான்கு தொகுதிகளில் வென்றுள்ள, பி.டி.எப்., எனப்படும் மக்கள் ஜனநாயக முன்னணியுடன் காங்கிரஸ் பேசி வருகிறது.
யு.டி.பி., தலைவர், தோங்குபார் ராயை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு கேட்டனர். அதைத் தொடர்ந்து, கவர்னர் கங்கா பிரசாத்தையும் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
இந்நிலையில், என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் கட்சி தலைமையில், பா.ஜ., - யு.டி.பி., - எச்.எஸ்.பி.டி.பி., எனப்படும் மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்த, ஆர்.டி.ஏ., எனப்படும் மண்டல ஜனநாயகக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லோக்சபா முன்னாள், சபாநாயகர், பி.ஏ., சங்மாவின் மகனும், என்.பி.பி., தலைவருமான, கான்ராட் சங்மா தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோரி, கவர்னரை நேற்று சந்தித்தனர்.
'காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டதால், அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது' என, யு.டி.பி., தலைவர், தோங்குபார் ராய் கூறியுள்ளார்.
தற்போது, ஆர்.டி.ஏ., கூட்டணிக்கு, 29 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாததால், இரண்டு கூட்டணியில் எது ஆட்சி அமைக்கப் போகிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இருந்தாலும், தங்களுக்கு, 34 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு உள்ளதாக, என்.பி.பி., கூட்டணி கூறிஉள்ளது. இதனால், அந்த கூட்டணிக்கு, ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகாலாந்தில் சிக்கல் தீர்ந்தது?
மற்றொரு வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 32 பேரின் ஆதரவு உள்ளதாக, என்.டி.பி.பி., எனப்படும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி தலைவர், நேபியு ரியோ உள்ளிட்டோர், கவர்னர், பி.பி.ஆச்சாரியாவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, என்.டி.பி.பி., 18 தொகுதிகளிலும், பா.ஜ., 12 தொகுதிகளிலும் வென்றன. ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு, எம்.எல்.ஏ., மற்றும் ஒரு சுயேச்சையின்
ஆதரவு என, 32 பேரின் ஆதரவு உள்ளதாக, என்.டி.பி.பி., கூறியுள்ளது. ஆளுங்கட்சியான, என்.பி.எப்., எனப்படும் நாகாலாந்து மக்கள் முன்னணி, 28 தொகுதிகளில் வென்றுள்ளது.
முன்னதாக, டென்னிங் தொகுதியில், என்.பி.எப்., வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கணக்கில் தவறு ஏற்பட்டிருந்ததாகவும், அந்தத் தொகுதியில், என்.டி.பி.பி., வெற்றி பெற்றுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு, என்.பி.எப்., தலைவர் டி.ஆர். ஜெலியாங் மறுத்துள்ளார். பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் பேச உள்ளதாகவும், அவர்களுடைய ஆதரவை கோர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திரிபுராவின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியான, ஐ.பி.எப்.டி., எனப்படும் இன்டிஜீனியஸ் திரிபுரா மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பங்கேற்கிறார். சமீபத்தில், 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 43 தொகுதிகளில் வென்றது. கடந்த, 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 16 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்தக் கட்சியின் மூத்த தலைவரான மாணிக் சர்க்கார், முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து