பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், போலீஸ் அதிகாரிக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது குறித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர், சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,
சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, இரண்டு கோடி ருபாய் லஞ்சம் கொடுத்ததாக, தகவல் வெளியானது.
இதையடுத்து, முன்னாள் சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட அறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த விசாரணை அறிக்கை அடிப்படையில், லஞ்ச விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, லஞ்சம் வாங்கியதாக கூறப்படும், முன்னாள் சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும், சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து