புதுடில்லி: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்கட்சியினர் இன்று பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக லோக்சபாவில் பஞ்சாப் நேஷனல் பாங்க் கடன் மோசடி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்., இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் குரல் எழுப்பினர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. காவிரி மேலாண்வாரியம் தொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர்.
கூட்டம் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். கூட்டம் துவங்கியதும் பல்வேறு எம்.பி.,க்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் லோக்சபாவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ராமகாஜன் தெரிவித்தார். இதுபோல், ராஜ்யசபாவிலும் காவிரி விவகாரம், ஆந்திரா, வங்கி மோசடி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதால் அவையை தலைவர் வெங்கையா நாயுடு மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
பார்லி., துவங்கும் முன்னதாக பாங்க் மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்., கட்சியின் எம்.பி.,க்கள் பார்லி.,வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன., 29ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின், பிப்., 9ல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, ஒரு மாத விடுமுறைக்கு பின், இன்று துவங்கி, ஏப்., 6 வரை நடக்க உள்ளது.இந்த இடைப்பட்ட காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, வைர வியாபாரி, நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வங்கி மோசடி தொடர்பாக, மத்திய அரசை, காங்., கடுமையாக விமர்சிக்கிறது.
பா.ஜ., தயார்:
எதிர்க்கட்சிகள் இதை, பார்லி.,யில் முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர், விஜய் மல்லையாவைத் தொடர்ந்து, நிரவ் மோடியும் வெளிநாடு தப்பிச் சென்றது தொடர்பாக, அரசுக்கு எதிராக பிரச்னை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
கடந்த, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது தான், நிரவ் மோடிக்கு கடன் வழங்கப்பட்டதாக, பா.ஜ., கூறுகிறது. அதனால், எதிர்க்கட்சிகளின் வாதத்தை முறியடிக்க, பா.ஜ., தயாராக உள்ளது.
மேலும், வங்கி மோசடி போன்ற பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் செல்வோரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில், புதிய மசோதா, இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்ததாக, முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்த மசோதாவுக்கு, காங்., உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தொடரிலேயே, இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதனால், இந்த மசோதா குறித்த வாதத்திலும், அனல் பறக்கும் என, எதிர்பார்க்கலாம்.
திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால், பா.ஜ., தெம்புடன் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகளை முழு வேகத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
சந்தேகம் :
நிரவ் மோடி விவகாரத்தை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க, பா.ஜ.,வும் வரிந்து கட்டுவதால், இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடக்குமா என, அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு, அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் அளிக்கும் முக்கிய மசோதாவும், நிலுவையில் உள்ளது. இது தவிர, பட்ஜெட் மீதான விவாதமும், இந்த கூட்டத்தில் நடக்க உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply