அகர்தலா : வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. திரிபுராவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 25 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. நாகாலாந்தில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களான, திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில், சமீபத்தில் சட்டசபைதேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சி நடக்கும் திரிபுராவில், மொத்தமுள்ள, 60 சட்டசபை தொகுதிகளில், 59 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
இதில் பா.ஜ., 35 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன்கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி., எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
திரிபுராவில், தனிப் பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமைப்பதால் மாநிலத்தில், 25 ஆண்டுகளாக, அசைக்க முடியாத சக்தியாக இருந்த, மார்க்சிஸ்ட் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
நாகாலாந்தில், என்.பி.எப்., எனப்படும், நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த, ஜெலியாங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஆளுங்கட்சியான, என்.பி.எப்., தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், என்.டி.பி.பி., எனப்படும், தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி, பா.ஜ., இணைந்து, எதிர் அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டன.
மொத்தமுள்ள, 60 தொகுதிகளில், என்.பி.எப்., கூட்டணி, 29 இடங்களிலும், என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணி, 29 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள, இரு தொகுதிகளில், சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், என்.பி.எப்., 27 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
என்.டி.பி.பி., 15 இடங்களிலும், பா.ஜ., 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு, எந்த கட்சிக்கும், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. சுயேட்சைகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளில், பா.ஜ., தலைவர்கள் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, பா.ஜ.,வை, தங்கள் கூட்டணிக்கு வரும்படி, என்.பி.எப்., அணி தலைவரும், முதல்வருமான, ஜெலியாங் அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழலில், பா.ஜ., எந்த அணிக்கு ஆதரவளிக்கிறதோ,
அந்த கூட்டணியே, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரசை சேர்ந்த, முகுல் சங்மா முதல்வராக உள்ள மேகாலயாவில், 59 தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.இதில், காங்., 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி எனப்படும், என்.பி.பி., 19 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி யான, பா.ஜ., இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற சிறிய கட்சிகள் 13 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள், மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.தேசியவாத காங்., ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சிக்கும், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், இங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
மூன்று மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி 'டுவிட்டர்' சமூகதளத்தில் கூறியதாவது: மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களின் மக்கள் தேர்தலில், மனந்திறந்து பேசியுள்ளனர். பா.ஜ.,வின், சிறந்த ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் நாட்டு மக்கள் தே.ஜ., கூட்டணியின் மீதும், அதன் வளர்ச்சிக் கொள்கை மீதும், அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது தேர்தல் முடிவுகளில் வெளிப்படுகிறது.திரிபுராவை வளம் பெறச்செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ., மேற்கொள்ளும். இம்மாநிலத்தை சேர்ந்த சகோதரர், சகோதரிகளின் சிறப்பான செயல்பாடு, ஈடு, இணையற்றது.பா.ஜ.,வுக்கு, அவர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு, நன்றி கூற வார்த்தைகளே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, டில்லியில் நேற்று, பா.ஜ.,வினர் மத்தியில், கட்சி தலைமையகத்தில், மோடி பேசியதாவது: திரிபுரா மாநிலத் தேர்தலின் போது, மத்திய அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களைஎதிர்க்கட்சியினர் கட்ட விழ்த்து விட்டனர்; தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பா.ஜ.,வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில், சிறுமைப்படுத்தப்பட்ட கட்சியாக, காங்., உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (14+ 224)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply