புதுடில்லி : நாடு முழுவதும், 50 கோடி தொழிலாளர்களுக்கு, மருத்துவம் மற்றும் முதுமை கால உதவித்தொகை, மகப்பேறுக்கான உதவித்தொகை, வேலை இல்லாதவர்களுக்கு உதவி, ஓய்வூதியம் உட்பட,பல்வேறு பலன்களைத் தரும், ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள், இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், 50 கோடி பேர். இதில், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, இ.எஸ்.ஐ., எனப்படும், தொழிலாளர் மாநில இன்சூரன்ஸ், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி போன்ற, சமூக பாதுகாப்பு பலன்கள் கிடைக்கின்றன.
மீதமுள்ளவர்கள், முறைப்படுத்தப்படாத துறைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. சமூக பாதுகாப்பு திட்டங்களும் இவர்களை சென்றடைவதில்லை.
4 அடுக்கு ஊழியர்கள்
இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை பெறப்போகும், 50 கோடி தொழிலாளர்களும், நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுவர். தங்கள் எதிர்கால பாதுகாப்புக்கு தேவையான நிதியை சேமிக்கும் வசதி இல்லாத, வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள், முதல் அடுக்கில் வருவர்.
இவர்களுக்கு தேவையான
பாதுகாப்பு நிதியை, அரசே முழுவதுமாக
வழங்கும்.
முறைப்படுத்தப்படாத துறைகளில்
பணியாற்றும், சேமிக்கும் வசதி இருந்தும்,
தன்னிறைவு பெறாத ஊழியர்கள், இரண்டாம் அடுக்கில் வருவர். இவர்களுக்கு, இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்படும்.
தங்கள் எதிர்கால பாதுகாப்புக்கு தேவையான சேமிப்பை தாங்கள் கொஞ்சமும், மீதியை
நிறுவனமும் செலுத்தும் திறன் பெற்றவர்கள், மூன்றாம் அடுக்கில் வருவர்.
தங்களுக்கு தேவையான நிதியை அவர்களே, சேமித்துக் கொள்ளும் வசதி படைத்தவர்கள்,
நான்காவது அடுக்கில் வருவர்.
இந்த சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து, அதில் பங்கு வகிக்கப் போகும் நிறுவனங்களின் கருத்துக்களை, ஏப்., 30க்குள் தெரிவிக்கும்படி, தொழிலாளர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி அறிக்கை தயாரான பின், இத்திட்டம், அமைச்சரவை ஒப்புதலுக்காக, பார்லி., கூட்டத்தில் வைக்கப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து