புதுடில்லி : அணுசக்தி ஒத்துழைப்பு உட்பட, மூன்று ஒப்பந்தங்கள், இந்திய - வியட்நாம் இடையே, நேற்று கையெழுத்தாகின. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில், பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதில், இந்தியாவும்,வியட்நாமும் உறுதி ஏற்றுள்ளன.
தென் கிழக்காசிய நாடான, வியட்நாம் அதிபர், டிரான் டாய் குவாங், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும், வியட்நாம் அதிபர், குவாங்கும், இரு தரப்பு நட்புறவு மேம்பாடு குறித்தும், வர்த்தக உறவு குறித்தும், நேற்று நீண்ட பேச்சு நடத்தினர்.
ஒத்துழைப்பு
இதன் பலனாக, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு, விவசாயம் உட்பட, பல முக்கிய துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்பு நல்க முடிவு செய்யப்பட்டது. பின், அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், விவசாயம் ஆகிய துறைகளில், மூன்று முக்கிய ஒப்பந்தங்கள், இரு நாடுகள்
இடையே, நேற்று கையெழுத்தாகின.
மேலும், எண்ணெய், வாயு கண்டறியும் துறையில், உறவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.வியட்நாம் அதிபர் முன்னிலையில், பிரதமர் மோடி, ஊடகங்களுக்கு விடுத்த செய்தி: இரு
நாடுகளும், கடல்சார் ஒத்துழைப்பு நல்கவும், திறந்த,திறன்மிக்க, பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கவும், இந்தியா - வியட்நாம் திட்டமிட்டு உள்ளன. இந்திய - பசிபிக் பிராந்தியத்தை,வளமிக்கதாக்க, இரு நாடுகளும் பாடுபடும்.
இப்பிராந்தியத்தில், இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை, பேசித் தீர்த்துக் கொள்ளும் வகையில் செயலாற்றுவோம்.எண்ணெய், வாயு கண்டறியும் துறைகளில், வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்க, இந்தியாவும், வியட்நாமும் சம்மதித்து உள்ளன.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், ஜவுளி ஆகிய துறைகளிலும், இரு நாடுகளின் வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு மோடி கூறினார்.
வரவேற்பு
முன்னதாக, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ், வியட்நாம் அதிபரை சந்தித்து பேசினார்.
அனைத்து துறைகளிலும், இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஸ் குமார் தெரிவித்தார்.
வியட்நாம் அதிபர், குவாங்கிற்கு, ஜனாதிபதி மாளிகையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தெற்கு சீனா கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. சமரச போக்கை கடைபிடிக்காமல், அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் சீனாவிற்கு, அண்டை நாடுகள்
கண்டனம் தெரிவிக்கின்றன.
'தெற்கு சீனா கடல் பிரச்னைக்கு, சர்வதேச சட்டப்படி தீர்வு காணப்பட வேண்டும்' என, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற வல்லரசு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
சீனாவின் இந்த அடாவடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே, ''இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், இறையாண்மை, சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடிஎச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, வியட்நாம் அதிபரும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், நிருபர்களிடம், வியட்நாம் அதிபர், டிரான் டாய் குவாங் கூறியதாவது: 'ஆசியான்' அமைப்பு நாடுகளுடன், பன்முகத்தன்மை வாய்ந்த இணைப்பு, இந்தியாவுக்கு கிடைப்பதற்கு, வியட்நாம் ஆதரவு அளிக்கிறது. இந்திய - பசிபிக் பகுதியில், பிராந்திய பாதுகாப்பு, பராமரிப்பு, கடல்சார் பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தெற்கு சீனா கடல் பகுதியில், பிராந்திய நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். இதில் பிரச்னைகள் இருந்தால், பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில், சர்வதேச சட்டத்தை பின்பற்றி பேச்சு நடத்தப்பட வேண்டும். துாதரக ரீதியில், சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply
Reply
Reply