கர்நாடக சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில முதல்வர், சித்தராமையா, அரசியல் தகிடுதத்த வேலைகளை துவங்கி விட்டார். காவிரி பிரச்னையில், தமிழகம், அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது போல, கர்நாடகாவிலும், 7ம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலினுடன், அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்னையில், பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு நிர்ணயித்திருந்த நீரின் அளவில், 14.75 டி.எம்.சி.,யை குறைத்து, 177.25 டி.எம்.சி., வழங்க உத்தரவிட்டது.
தீர்ப்பு:
இது, தமிழகத்திற்கு பாதகமாக இருந்தாலும், 'காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு, ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, பிப்., 22ல், தமிழக அரசு சார்பில், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில், அனைத்து கட்சி தலைவர்களும், டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என, முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமரை சந்திக்க, தமிழக அரசு சார்பில், நேரம் கேட்கப்பட்டு உள்ளது; இதுவரை, ஒதுக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலத்தில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் பதவி காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, காங்கிரஸ் போராடி வருகிறது. எனவே, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைய விட மாட்டோம்' என, அம்மாநில முதல்வர், சித்தராமையா கூறி உள்ளார்.
தீர்மானம்:
தேர்தல் வர உள்ளதால், காவிரி பிரச்னையில் ஆதாயம் தேட, அரசியல் தகிடுதத்த வேலைகளை, அவர் துவக்கி விட்டார். தமிழக அரசு, அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது போல, கர்நாடக அரசு சார்பில், வரும், 7ல், அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என, அறிவித்துள்ளார். பெங்களூரு, விதான் சவுதாவில் நடைபெறும், அனைத்து கட்சி கூட்டத்தில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது' என, மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், காவிரி நீர் படுகை அணைகளின் கட்டுப்பாடு, கர்நாடக அரசிடமிருந்து, வாரியத்திற்கு மாறி விடும் என்பதால், அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக உள்ள, பா.ஜ.,வும், வரும் தேர்தலில், ஆட்சியை பிடிக்க, காய் நகர்த்தி வருகிறது. எனவே, மத்திய, பா.ஜ., அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இதை அறிந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து, காவிரி பிரச்னையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதற்காக நேற்று, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். அதன் தொடர்ச்சியாக இருவரும், இன்று சென்னை, தலைமை செயலகத்தில், காவிரி பிரச்னை குறித்து, ஆலோசிக்க உள்ளனர்.
''லோக்சபா, 4ம் தேதி கூடுகிறது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைத்திட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பர். ஆந்திராவில், தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாகவும், குரல் எழுப்புவோம்''
-தம்பிதுரை,
லோக்சபா துணை சபாநாயகர் - அ.தி.மு.க.,
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து