ஐதராபாத் : ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய மிகப் பெரிய வேட்டையில், ஆறு பெண்கள் உட்பட, 12 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; துப்பாக்கிச் சண்டையில், ஒரு வீரரும் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரில் முதல்வர், ரமண் சிங் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தெலுங்கானாவில் முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்களின் எல்லையில், நக்சலைட்களின் கூட்டம் நடக்கவிருப்பதாக, சத்தீஸ்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சுற்றி வளைப்பு:
அதையடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நக்சல் ஒழிப்பு பிரிவான, 'கிரே ஹவுண்ட்ஸ்' மற்றும் சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா போலீசின் சிறப்புப் பிரிவுகள் அடங்கிய மிகப் பெரிய குழு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம்,
தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கோத்தேகுடம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் மற்றும் சத்தீஸ்கரின், புஜாரிகாங்கர் வனப் பகுதிக்கு இடையே, 100 நக்சல்கள் குழுமியிருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியை, போலீசாரும், சிறப்புப் பிரிவு வீரர்களும் சுற்றி வளைத்தனர்.
பறிமுதல்:
உடனடியாக சரணடையும்படி, நக்சல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நக்சல்கள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துவங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை, நேற்று பகல் வரை நீடித்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில், ஆறு பெண்கள் உட்பட, 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த கிரே ஹவுண்ட்ஸ் சிறப்பு பிரிவைச் சேர்ந்த காவலர், சுஷில் குமார் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தெலுங்கானாவின் பத்ராச்சலத்தில் உள்ள மருத்துவமனைக்கு, அவர்கள் எடுத்துச் செல்லப்பட்டனர். இதில், சுஷில் குமார் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து, துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மற்ற நக்சல்களைப் பிடிக்க, நான்கு மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நான்கு மாநிலங்கள் இணைந்து நடத்திய வேட்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்கள், பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் துவங்கியுள்ளன. உயிரிழந்த அனைவரும், தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலக் குழுவின் செயலரும், மூத்த தலைவருமான, ஹரி பூஷண் தலைமையில் நடந்த கூட்டத்தில், மற்றொரு முக்கிய தலைவரான, தாமோதர் எனப்படும், படே சோக்கா ராவ் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். துப்பாக்கிச் சண்டையின்போது, அவர்கள் தப்பிச் சென்றதாக, தெலுங்கானா போலீசார் சந்தேகப்படுகின்றனர். நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, பிரபல எழுத்தாளர், பி.வரவர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, அவர் வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து