''முதல்வர் பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலை துறையில், ஐந்து திட்டப் பணிகள், அவரது உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன,'' என, தினகரன் ஆதரவாளர்கள், வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, அவர்கள் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி வசம், நெடுஞ்சாலை துறையும், பொதுப்பணித்துறையும் உள்ளன. நெடுஞ்சாலை துறையில், சமீபத்தில், ஐந்து திட்டப் பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டது. அதில், வேறு ஒப்பந்ததாரர்களை கலந்து கொள்ள விடாமல் செய்து, அனைத்து டெண்டர்களும், முதல்வரின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன; அவை அனைத்தும், உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.
ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்திற்கு, 713 கோடி ரூபாய்க்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. டெண்டர், 1,515 கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 800 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரருக்கு, 713 கோடி ரூபாய் லாபம்.
இந்த டெண்டர், 'ராமலிங்கம் அண்ட் கோ' கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, முதல்வர் பழனிசாமியின் மகன், மிதுனின் சகலை சந்திரகாசனின் தந்தை ராமலிங்கத்திற்கு சொந்தமானது. இரண்டாவதாக, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் சாலையை, அகலப்படுத்தி மேம்படுத்தும் திட்டத்தின், திட்ட மதிப்பீடு, 408 கோடி ரூபாய். டெண்டர், 704 கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை, முதல்வரின் சம்பந்தி எடுத்துள்ளார்.
மூன்றாவது, மதுரை ரிங் ரோடு திட்டம். இதன் திட்ட மதிப்பீடு, 200 கோடி ரூபாய். இந்த பணிக்கான டெண்டர், முதல்வர் பழனிசாமியின் மாமனார், சுப்பிரமணியம் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நான்காவதாக, வண்டலுார் - வாலாஜாபாத் நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம்.
இதன் திட்ட மதிப்பீடு, 200 கோடி ரூபாய். இதற்கான டெண்டரும், முதல்வரின் மாமனார் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் சாலையை மேம்படுத்தி, ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் பொறுப்பு, 2,000 கோடி ரூபாய்க்கு, முதல்வரின் உறவினர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்உள்ளது. அனைத்தும், 'சிங்கிள் டெண்டராக' வழங்கப்பட்டுள்ளன; இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஐந்து டெண்டரில், அரசுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்விபரத்தை, கவர்னருக்கும் அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து