புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தியை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, டில்லி கோர்ட் அனுமதி அளித்து உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற, 'டிவி' நிறுவனம், விதிமுறைகளை மீறி, அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அன்னிய முதலீடாக, 4.2 கோடி ரூபாய் பெறுவதாக, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று, 305 கோடி ரூபாய் முதலீட்டை, ஐ.என்.எக்ஸ்., நிறுவனம் பெற்றது.
அப்போதைய மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, இந்த முறைகேட்டுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, விசாரணை நடந்து வரும் நிலையில், வெளிநாட்டிற்கு சென்றிருந்த, கார்த்தி, நேற்று முன்தினம் காலை நாடு திரும்பிய போது, சென்னை விமான நிலையத்தில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, உடனடியாக டில்லி அழைத்து செல்லப்பட்டார்.
அவரை, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று காலை, கார்த்தி, தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார்; அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன; அதன் பின், அதிகாரிகள், அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு, கார்த்தி ஒத்துழைப்பு அளிக்கவில்லையென, சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அவரை, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., அனுமதி கோரியது.
கார்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல், அபிஷேக் சிங்வி, இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆறு மாதங்களாக, எவ்வித நோட்டீசும் அளிக்காமல், கார்த்தியை திடீரென கைது செய்துள்ளதாக, சி.பி.ஐ., மீது குற்றஞ்சாட்டினார். கார்த்தி, முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், வெளிநாடு சென்று, அவர் பணம் பெற்றதாக கூறப்படும் வங்கி கணக்கை முடித்திருப்பதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கார்த்தியை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு,
டில்லி கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவர் உடனடியாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கார்த்தியின் உடல் நிலை கருதி, அவர் மருந்து சாப்பிட அனுமதித்த கோர்ட், அவருக்கு வீட்டு சாப்பாடு அளிப்பதற்கான அனுமதியை மறுத்துவிட்டது. கார்த்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான, இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர், சி.பி.ஐ.,யிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினோம்; அப்போது, தன் மகனின் தொழிலுக்கு உதவும்படி கூறினார். அதன் படி, அவரது மகன் கார்த்தியை, டில்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தோம். எங்கள் நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள, பணம் கேட்டார். இதையடுத்து, கார்த்தியின் வெளிநாட்டு நிறுவனத்துக்கு, 3.1 கோடி ரூபாய் வழங்கினோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்திராணி, பீட்டர் முகர்ஜியின் வாக்கு மூலத்தில், சிதம்பரத்தின் பெயரும் அடிபடுவதால், விரைவில், சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து