புதுடில்லி : 'பயங்கரவாதத்துக்கு மதம் என்ற பேதம் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, எந்தவொரு மதத்துக்கும் எதிரானதல்ல' என, பிரதமர் நரேந்திர மோடியும், ஜோர்டான் மன்னர், இரண்டாம் அப்துல்லாவும் தெரிவித்தனர்.
நடவடிக்கை:
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக, மத்திய கிழக்கு நாடான, ஜோர்டான் மன்னர், இரண்டாம் அப்துல்லா வந்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த, இஸ்லாம் மதம் தொடர்பான கருத்தரங்கில், பிரதமர் மோடி பேசியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, எந்தவொரு மதத்துக்கும் எதிரானதல்ல.
வேற்றுமையில் ஒற்றுமையே, நம் ஜனநாயகத்தின் பாரம்பரியம். இந்நாட்டில், அனைத்து மதத்தினரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். இங்குள்ள அனைத்து மதங்களுக்கும், சமமான வாய்ப்பு உள்ளது.
எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை பின்பற்றினாலும், நாம் இந்தியர் எனக் கூறுவதில், அனைவரும் பெருமைப்படுகிறோம். இஸ்லாம் மதத்தின் மனித நேயத்துடன், நவீன தொழில்நுட்பத்தையும் இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் ஒரு கையில் குரான் வைத்திருந்தாலும், மற்றொரு கையில் கம்ப்யூட்டரையும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜோர்டான் மன்னர், இரண்டாம் அப்துல்லா பேசியதாவது: பயங்கரவாதத்துக்கு மதம் என்ற பேதம் கிடையாது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, எந்த மதத்துக்கும் எதிரானதல்ல. இது வன்முறை, வெறுப்புக்கு எதிரான போர்.அனைவரும் இணைந்து, நாட்டை மேம்படுத்த வேண்டும். இது, உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள பொறுப்பு.
வேறுபாடு:
நாட்டின் பாதுகாப்பு, மக்களின் எதிர்காலம் போன்றவற்றை உறுதி செய்ய, பயங்கரவாதத்துக்கு எதிராக, முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லா தோரும் இணைந்து செயல்பட வேண்டும். உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, ஜோர்டான் முயன்று வருகிறது. மக்கள் - நாடுகளுக்கு இடையே, எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து