திரிபுரா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், நாளை வெளியாகவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஏற்கனவே நடந்துவரும், யெச்சூரி - பிரகாஷ் கராத் இடையிலான மோதல், அடுத்த கட்டத்தை எட்டலாம் என தெரிகிறது.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைத் தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதன் முடிவுகள் நாளை வெளியாகஉள்ளன. இதில், மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியே நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தலைவலி:
தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து, தங்கள் ஆட்சியை மீண்டும் தக்க வைத்தாலும், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் புதிய தலைவலி காத்துள்ளது. இது குறித்து, டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
தேர்தல் வெற்றியை கருத்தில் வைத்து, காங்கிரசுடன், தேர்தல் கூட்டணி ஏற்படுத்தும் வகையில், பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி எடுத்த முயற்சிகளை, மூத்த தலைவர், பிரகாஷ் கராத் சமீபத்தில் முறியடித்தார். இந்த பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பம் நீடிக்கிறது. ஏப்ரலில் நடக்கவுள்ள, கட்சியின் அகில இந்திய மாநாடு வரை, இந்த சிக்கலுக்கு தெளிவு பிறக்க வழியில்லை.
இந்நிலையில் தான், திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதிலும் ஒரு பிரச்னை வெடிக்க காத்திருக்கிறது. இதற்கு காரணம், அம்மாநிலத்தின் ஒரே ஒரு ராஜ்யசபா சீட். தற்போது ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளவர் ஜர்னதாஸ் பைதியா. இவரது பதவிக் காலம்,
2022ம் ஆண்டு வரை உள்ளது. ஆனாலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், இவருக்கு, 'சீட்' தரப்பட்டு, வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
தேர்தலில், எம்.எல்.ஏ., வாக வெற்றி பெற்றால், அவர், எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விடுவார். அவரது இடம் காலியானதும், அதில், கட்சியின் முக்கிய தலைவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்பட்டு, எம்.பி.,யாக்கப்படுவார் என்பதே, இதன் பின்னணி. அந்த முக்கிய தலைவர்கள், சீதாராம் யெச்சூரியும், பிருந்தா காரத்தும் தான். யெச்சூரி ஏற்கனவே இரண்டு முறை ராஜ்யசபா, எம்.பி.,யாக பதவி வகித்து விட்டார். இவரை மூன்றாவது முறையாக, எம்.பி.,யாக அனுப்பி வைக்க, காங்கிரஸ் முன்வந்தது. ராகுலே முயற்சி செய்தும், அது நடக்கவில்லை.
'மார்க்சிஸ்ட் கட்சியில், இரண்டு முறைக்கு மேல், யாரும் ராஜ்யசபா, எம்.பி.,யாக பதவியில் இருக்கக்கூடாது' என, விதி இருப்பதாக கூறி, அந்த வாய்ப்பை மார்க்சிஸ்ட் மறுத்துவிட்டது.
'ஜோதிபாசுவுக்கு பிரதமர் வாய்ப்பு வந்தபோது, விதிகளை காரணம் காட்டி, தவிர்த்ததை போல, யெச்சூரிக்கு வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தாததும் வரலாற்றுப் பிழையே' என, கட்சிக்குள், அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்கின்றனர்.
பார்லிமென்ட்டில் இடதுசாரிகளின் பலம் குறைந்து, முக்கிய ஆளுமைகள் யாரும் இல்லாமல் இருப்பதால், திரிபுராவிலிருந்து, யெச்சூரியை அனுப்ப, மாணிக் சர்க்காரும் விரும்புவதாக தகவல் உள்ளது. ஆனால், இதை, பிரகாஷ் கராத் தலைமையிலான கேரள, 'லாபி' கடுமையாக எதிர்க்கிறது.
ராஜினாமா:
திரிபுரா சீட்டை, ராஜ்ய சபா, எம்.பி.,யாக ஒரே ஒருமுறை மட்டுமே இருந்த, பிருந்தா காரத்திற்கே வழங்க வேண்டுமென, இந்த தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஒரு வேளை, ஜர்னதாஸ் பைதியா, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அவர், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததும், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜ்யசபா தேர்தல்: காங்., யோசனை:
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், காலியாக உள்ள, ஐந்து ராஜ்யசபா இடங்களுக்கு, வரும், 23ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், நான்கு இடங்கள் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு இடம் மார்க்சிஸ்ட் கம்யூ., வசம் உள்ளன. நான்கு இடங்களையும், ஆளும் திரிணமுல் காங்., தக்க வைப்பதில் சிக்கல் ஏதுமில்லை. அதே நேரத்தில், மீதமுள்ள ஒரு தொகுதிக்குத்தான் போட்டி உள்ளது. சட்டசபையில் போதிய, எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், மற்றவர்களின் ஆதரவு மார்க்சிஸ்டுக்கு தேவை.
இந்நிலையில், பா.ஜ., வளர்ச்சியை தடுத்து நிறுத்த, சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு அளிக்க முன்வந்தால், தாங்களும் ஆதரிப்பதாக, காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவர், ஆதிர் சவுத்ரி கூறியதாவது: பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை மீண்டும் வேட்பாளராக மார்க்சிஸ்ட் நிறுத்தினால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அவ்வாறு இல்லாத நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளிக்க மார்க்சிஸ்ட் முன்வந்தால், நாங்களும் ஆதரவு அளிப்போம். மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பிரிந்ததால், மாநிலத்தில், பா.ஜ.,வுக்கே சாதகமாக அமைந்துள்ளது. பா.ஜ., வளர்ச்சியை தடுத்து நிறுத்த, இந்த புதிய ஏற்பாட்டுக்கு நாங்கள் தயார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து