புதுடில்லி : வங்கிக் கடன் மோசடி உட்பட, பொருளாதார குற்றங்கள் செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வோரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பினார்.
மோசடி:
அந்த வரிசையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் உதவியுடன், 12 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் மோசடி செய்த, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர், சோக்சி, சமீபத்தில் வெளிநாட்டுக்கு தப்பினர்.
இவ்வாறு வெளிநாடு தப்பிச் செல்லும் குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக பறிமுதல் செய்யும் வகையில், 'வெளிநாடு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா'வை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: 'வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்வது உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்' என, பட்ஜெட்டில் அறிவித்தோம். அதன்படி, வெளிநாடு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா, வரும், 5ல் துவங்கும், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்திலேயே தாக்கல் செய்யப்படும். ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, குற்றத்தால் கிடைக்கும் லாபத்துக்கு நிகரான சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய முடியும்; அதுவும், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான், இந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.
பறிமுதல்:
அதே நேரத்தில்., புதிய சட்டத்தில், சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக, நீதிமன்றம் கைது, 'வாரன்ட்' பிறப்பித்தால், வழக்கின் விசாரணைக்கு அஞ்சி, வெளிநாடு தப்பிச் சென்றால் அல்லது விசாரணைக்கு ஆஜராவதற்காக நாடு திரும்ப மறுத்தால், அவர், வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். இந்த சட்டம், 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகளுக்கு பொருந்தும். ஏற்கனவே தப்பிச் சென்றவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும்.
வெளிநாடு தப்பிச் சென்றவர் மீதான வழக்கு உடனடியாக முடிவுக்கு வர வாய்ப்பில்லை. அதனால், உடனடி நிவாரணம்
கிடைக்கும் வகையில், நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்த உடனேயே, அந்த நபரின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். இதை எதிர்த்து, எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு:
ஏமாற்றும் ஆடிட்டர்களை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில், என்.ஏ.எப்.ஆர்.ஏ., எனப்படும், தேசிய நிதி பதிவு ஆணையம் ஏற்படுத்தவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து நிறுவனங்களின் ஆடிட்டர்களும் இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வங்கி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பியுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் மோசடி குறித்து, பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் ஆன்ட்ரப் கிளைகளில் உள்ள, நிரவ் மோடியின் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து