பெங்களூரு : சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு, போலீஸ் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கை, ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக, சி.ஐ.டி., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், அவருக்கு தனி சமையல் அறை, 'டிவி' நாற்காலிகள், தனி வராண்டா, மெத்தை என, பல சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக, அப்போதைய சிறைத்துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் உதவி செய்ததாகவும், தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
சசிகலாவுக்கு வழங்கிய சிறப்பு வசதிகள் பற்றிய படங்களும், சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் வழங்கிய சீருடையை அணியாமல், ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்கு வருவது போன்ற, 'வீடியோ' காட்சிகளும், கன்னட செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகின. இதனால், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணை கமிட்டியை, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா அமைத்தார்.
இதையடுத்து, சிறைக்கு நேரில் சென்று, வினய்குமார் ஆய்வு செய்தார். பின், இது தொடர்பான அறிக்கையும், அரசிடம் தாக்கல் செய்தார். அறிக்கையில், சிறை விதிமுறைகளை மீறி, சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், உயர்மட்ட விசாரணை குழுவின் அறிக்கையையும், அதன் மீதான பரிந்துரைகளையும், கர்நாடக அரசு ஏற்றுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும், அதிகாரபூர்வ உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
* வினய்குமார் தலைமையிலான, உயர்மட்ட விசாரணை குழு அளித்த அறிக்கை ஏற்கப்பட்டு உள்ளது
* சிறையின், தலைமை கண்காணிப்பாளராக இருந்த, கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளராக இருந்த, அனிதா ஆகியோர், விதிமுறைகளை
மீறியதாக, அப்போதைய, டி.ஐ.ஜி., தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
* அதனால், இது குறித்த வழக்கு விசாரணை, சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்படுகிறது
* லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்படுகிறது
* சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்யநாராயணா ஆகியோர், விதிமுறைகளை மீறியுள்ளனரா என, நிர்வாக சீர்திருத்த துறை விசாரணை நடத்த வேண்டும்
* உள்துறை அமைச்சகம் வகுத்த விதிமுறைகளை, மூன்று மாதங்களுக்குள் சிறையில் அமல்படுத்த வேண்டும்
* பரப்பன அக்ரஹாரா சிறை உட்பட, மாநிலத்தின் அனைத்து சிறைகளிலும், மொபைல்போன் செயல்படாத வகையில், 'ஜாமர்' கருவிகள் பொருத்தப்பட்டு, ஆண்டு முழுவதும் நிர்வகிக்கும்படி ஒப்பந்தம் விட வேண்டும்
* சிறை விதிகளின்படி மட்டுமே, தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை கவனித்து கொள்ள வேண்டும். விதிமுறைகள் மீறப்படாத வகையில், சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., கவனிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
''சிறை முறைகேடு தொடர்பாக, அரசு எடுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கையை வரவேற்கிறேன். விதிமுறைப்படி, அரசு ஊழியர்கள், அரசு மீது குற்றஞ்சாட்டக்கூடாது. துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பேசுவது விதிமீறல் அல்ல என, உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது; அந்த வகையில், பணி விதிமுறையை நான் மீறவில்லை.''
-ரூபா, ஐ.பி.எஸ்., அதிகாரி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து