தமிழக கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியனின், கார் டிரைவர் மரணம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர், சவுந்தரராஜன், 37; அமைச்சர், ஓ.எஸ்.மணியனிடம், கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அமைச்சரின் வீட்டிலிருக்கும் போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே, மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்த அவர், மற்றொரு டிரைவர், நாராயணனிடம், அமைச்சரை கோட்டைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதன்பின், காவலர் சரவணன் என்பவருடன், இருசக்கர வாகனத்தில், மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தகவல்
கடற்கரை சாலையில் சென்ற போது, சவுந்தரராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். கோட்டையில், முதல்வர் நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சருக்கு, டிரைவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, அவர் மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரின் மனைவியை சந்தித்து, ஆறுதல் கூறினார். டிரைவர் உடல், அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், அமைச்சர், அங்கு
சென்றார்.
அப்போது, சவுந்தரராஜன் உறவினர்கள், அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை.
'உடனடியாக, சவுந்தரராஜனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம். அதை செய்யவில்லை' என, குற்றஞ்சாட்டினர்.
புகார்
அதைத் தொடர்ந்து அமைச்சர், 'உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருந்தால், போலீசில் புகார் செய்யுங்கள்' என, அவர்களிடம் கூறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.பின், அமைச்சர், ஓ.எஸ்.மணியன், தன் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: அதிகாலை, 4:30 மணியளவில், ரயில் நிலையத்தில் இருந்து, டிரைவர், சவுந்தரராஜன், என்னை காரில் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரின் புது வீடு கிரஹப்பிரவேசம், சமீபத்தில் நடந்தது.அதில், என்னால் பங்கேற்க முடியவில்லை. எனவே, சவுந்தரிடம், 'வீட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததா?' என, கேட்டேன். 'சிறப்பாக நடந்தது' என்றார்.
'வேறு நிகழ்ச்சி இருந்ததால், உன் வீட்டு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. எனவே, மாலை வீட்டிற்கு வருகிறேன்' என்றேன். அவரும், 'சரி' என்றார். என்னை வீட்டில் விட்டதும், நான் உள்ளே சென்று விட்டேன்.
அதன்பின், சவுந்தரராஜன், வீட்டின் சமையல் அறைக்கு சென்று, மூன்று இட்லி, ஒரு கரண்டி பொங்கல் சாப்பிட்டு உள்ளார். அதன்பின், காரை கழுவி தயார் செய்துள்ளார்.
ரூ.4,௦௦௦
பின், நாராயணன் என்ற டிரைவரிடம், 'எனக்கு உடல்நிலை ஒரு மாதிரியாக உள்ளது. நான் மருத்துவமனை செல்கிறேன்' எனக்கூறி, சாவியை கொடுத்து உள்ளார். அப்போது அங்கிருந்த, காவலர் திருவேங்கடம், அவரை மருத்துவமனைக்கு செல்லலாம் என, அழைத்துள்ளார். அதற்கு, அவர், 'அருகில் உள்ள, அமைச்சர், வீரமணியின் டிரைவரை அழைத்துள்ளேன். அவர் வந்ததும், அவருடன் செல்கிறேன்' என, கூறியுள்ளார்.
கார் சாவியை, மற்றொரு டிரைவர், நாராயணனிடம் கொடுத்த பின், காரில் வைத்திருந்த பையை எடுத்து, அறைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார். இதற்கிடையில், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. அதனால்,காலை, 9:30 மணிக்கு புறப்பட்டேன். டிரைவர் நாராயணன் வந்து, காரை எடுத்தார்.
அவரிடம், 'டிரைவர் சவுந்தரராஜன் எங்கே?' என, கேட்டேன். அதற்கு அவர், 'அவருக்கு உடல்நிலை சரியில்லையாம்' என்றார். உடனே, திருவேங்கடத்தை அழைத்து, என் பையிலிருந்த, 4,000 ரூபா யை கொடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறி புறப்பட்டேன்.
ஆனால், சவுந்தரராஜன் மருத்துவமனைக்கு செல்லாமல், வீரமணியின் டிரைவருக்காக காத்திருந்து உள்ளார். சிறிது நேரம் கழித்து, வலி அதிகமானதும், காவலர் சரவணன் என்பவருடன், மோட்டார் சைக்கிளில், மருத்துவமனைக்கு புறப்பட்டு உள்ளார்.
டி.ஐ.ஜி., அலுவலகம் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும், இறந்த தகவல் கிடைத்தது. உடனே மருத்துவமனைக்கு சென்றேன். உறவினர்கள், 'செஞ்சிக்கு உடலை எடுத்துச் செல்ல வேண்டும்' என்றனர்.
நான் தான், குடியிருந்த வீட்டிற்கு, உடலை எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறி, அனுப்பி வைத்தேன். அதன்பின், அவரது வீட்டிற்கு நான் சென்ற போது, 'மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, விபத்து ஏற்படுத்தி கொன்று விட்டனர்; பாதுகாப்பு அதிகாரி அடித்து கொன்று விட்டார்' என்றும், அதன்பின், 'அமைச்சரே அடித்து கொன்று விட்டார்' என்றெல்லாம், செய்திகள் வெளியானதை கண்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
நான், சவுந்தரராஜன் உறவினர்களிடம், 'அவரது மரணத்தில் சந்தேகம் இருந்தால், போலீசில் புகார் செய்யுங்கள்' என, யோசனை கூறி வந்து விட்டேன். பின், என் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை பார்த்தேன்.
அதில், அவரே நடந்து, வாசல் வரை சென்று, காவலருடன் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி உள்ளது. அதுவரை, அவர் நன்றாக பேசிக் கொண்டிருந்த காட்சிகளும் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply