மும்பை:துபாயில் உயிரிழந்த, பிரபல நடிகை, ஸ்ரீதேவியின் உடல், அரசு மரியாதையுடன்
மும்பையில், நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54, உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக, வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் நகருக்கு சென்றிருந்தார். திருமணம் முடிந்ததும், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், கடந்த மாதம், 24ம் தேதி இரவு, மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நினைவிழந்த நிலையில், குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்ததாக, டாக்டர்கள், தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணத்தில் சர்ச்சை எழுந்தது. அவரின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான, போனி கபூர் மற்றும் அவரது உறவினர்களிடம், துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பல கட்ட விசாரணைகளுக்குப் பின், 'ஸ்ரீதேவியின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை' என, துபாய் போலீஸ், அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்ததும், அவரின் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, துபாய் அரசு ஒப்புதல் வழங்கியது. அதன் பின், ஸ்ரீதேவியின் உடல், தனி விமானம் மூலம், நேற்று முன்தினம் இரவு, மும்பை வந்தடைந்தது.இதையடுத்து, மும்பை அந்தேரி பகுதியில், ஸ்ரீதேவியின் வீடு அருகே உள்ள மைதானத்தில், நேற்று காலை, 9:30க்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது உடல் வைக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் பலரும், ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று, அஞ்சலி செலுத்தினர்.மதியம், 12:30 வரை, அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின், மஹாராஷ்டிரா மாநில அரசு சார்பில், அந்த மாநில போலீசார், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தி, அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டு, அங்கிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில், விலே பார்லேயில் உள்ள மயானத்தில், ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை, கணவர், போனி கபூர் செய்ய, அவரது மகள்கள், ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் உடனிருந்தனர்.
ரசிகர்கள் தள்ளுமுள்ளு:
ஸ்ரீதேவி
உடல் வைக்கப்பட்டிருந்த மைதானவாசலில், அதிகாலை முதலே, ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. மும்பை மட்டுமின்றி, மாநிலத் தின் பல பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் வந்திருந்தனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்தோர் மட்டுமின்றி, பல்வேறு வட மாநிலங்களிலிருந்தும், ரசிகர்கள் திரண்டனர்.
மைதான
வாசலில், ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், வரிசையை
ஒழுங்கு படுத்தவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும், போலீசார் லேசான
தடியடி நடத்தினர். பாலிவுட் பிரபலங்கள் பலரும், அஞ்சலி செலுத்த வந்த
நேரத்தில், போலீசாரின் தடியடி சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.
உடலை கொண்டு வர உதவிய இந்தியர்
வளைகுடா
நாடான, ஐக்கிய அரசு எமிரேட்சின், துபாய் நகரில் உயிரிழந்த, பிரபல நடிகை,
ஸ்ரீதேவியின் உடலை, மும்பைக்கு கொண்டு வருவதற்கு, அங்கு வசிக்கும்,
கேரளாவைச் சேர்ந்த, அஷ்ரப் ஷெர்ரிதமரசேரி உதவி உள்ளார்.நடிகை ஸ்ரீதேவி, துபாய் நகரில் உயிரிழந்தார். அங்கு, பிரதே பரிசோதனை உள்ளிட்ட, சட்ட நடைமுறைகள் முடிந்தாலும், மும்பைக்கு கொண்டு வருவதற்கான ஆவணங்களில், அஷ்ரப் ஷெர்ரி தமரசேரி போட்ட கையெழுத்தே முக்கியமானதாகும்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அங்குள்ள இந்திய துாதரகம் நடவடிக்கை எடுத்தது. உடலை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், இது போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர் கள், யு.ஏ.இ.,யில் இறந்தால், அங்குள்ள ஒருவர் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு, அஷ்ரப் போட்ட கையெழுத்தே, ஸ்ரீதேவியின் உடலை விரைவாக கொண்டு வருவதற்கு உதவியது.
கேரளாவைச் சேர்ந்தவரான அஷ்ரப், 44, மெக்கானிக் காக பணியாற்றி வருகிறார். யு.ஏ.இ.,யில் உயிரிழக் கும், மற்ற நாட்டினர் உடலை எடுத்துச் செல்வதற்கு உதவும், மிகப்பெரிய சேவையை செய்து வருகிறார். இதுவரை, 38 நாடுகளைச் சேர்ந்த, 4,700 உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதற்கு, அவர் உதவி உள்ளார்.ஸ்ரீதேவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட அதே நாளில், மேலும், 5 உடல்களை எடுத்துச் செல்லவும், அவர் உதவி செய்தார்.
காஞ்சி பட்டும்,குங்கும பொட்டும்!
மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் உடலுக்கு நேற்று, சிவப்பு நிற காஞ்சி பட்டு புடவை உடுத்தப்பட்டு, அவரது நெற்றியில், பெரிய குங்கும பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்த சென்ற, ரசிகர்கள், பொதுமக்களும், தங்கள் மொபைல் போன்களை, 'சுவிட்ச் ஆப்' செய்யும்படி அறிவுறுத் தப்பட்டனர். ஸ்ரீதேவியின் அஞ்சலி நிகழ்ச்சியை படம் பிடிக்க, மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மைதானத்தின் வெளியில் இருந்தே செய்தி சேகரித்தனர்.
வேதனையில் ஸ்ரீதேவி : ராம்கோபால் வர்மா
நடிகை ஸ்ரீதேவியின் தீவிரமான ரசிகர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஸ்ரீதேவி ரசிகர்களுக்கென
உருக்கமான ஒரு கடிதத்தை எழுதியுள்ள தாவது:“பல லட்சம் மக்கள் போலவே, மிக
அழகான பெண் ஸ்ரீதேவி என நம்புகிறவன் நான். 20 வருடங்களுக்கும் மேலாக
திரை யுலகத்தை ஆட்டிப் படைத்தவர். அவருடன், 'க்ஷனஷனம், கோவிந்தா கோவிந்தா' ஆகிய படங்களில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. பலருக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை நேர்த்தியாக இருந்ததாகவே தெரிந்தது.
ஆனால், நிஜ வாழ்க்கையில்...
அவருடைய அப்பா மறையும் வரை அவர் வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவை. அதன் பின் கட்டுப்பாடான அம்மாவால் கூண்டுக்குள் அடைபட்ட பறவை.அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு கறுப்புப் பணம் தான் சம்பளம். அப்பா மறைந்த பின், உறவினர்களால் ஸ்ரீதேவி ஏமாற்றப்பட்டார். பொறுப்பற்ற அம்மாவால், பிரச்சனைக்குரிய சொத்துக்களை வாங்கி ஏமாற்றப்பட்டார்.
போனி கபூர் அவருடைய வாழ்க்கையில் நுழையும் நேரத்தில், ஸ்ரீதேவியிடமே பணமே இல்லை.போனியும் அப்போது கடனாளி, ஸ்ரீதேவியின் அழுகைக்கு அவரால் தோள் கொடுக்க முடிந்தது. ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா, பக்கத்து வீட்டுக்காரரின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீதேவியின் அம்மா, அனைத்து சொத்துக்களையும் ஸ்ரீதேவியின் பெயரில் எழுதிவிட்டார். ஸ்ரீலதா வழக்கு தொடர்ந்தார். அதனால் போனியைத் தவிர அவருக்கு எந்த ஆதரவும் இல்லாமல் இருநதது.போனியின் அம்மா, ஸ்ரீதேவிதான் அவர்களது குடும்பத்தை பிரித்தார் என்று குற்றம் சாட்டி, ஸ்ரீதேவியை ஹோட்டல் வரவேற்பறையில் வயிற்றில் குத்தினார்.
மீண்டும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடிக்க வரும் வரை, மகிழ்ச்சியற்ற பெண்ணாகவே இருந்தார். எதிர்கால பயம், மோசமான திருப்பங்கள் அவருடைய வாழ்க்கையில் அமைதியைக் குலைத்தது.
மற்றவர்களைப் போலவே வயது அவருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. அவர் செய்து கொண்ட சில அறுவை சிகிச்சைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். அவர் தொடர்ந்து, மற்றவர்களால் தான் வழி நடத்தப்பட்டு வந்தார். பெற்றோர், உறவினர்கள், கணவர், குழந்தைகள் என அது தொடர்ந்தது.
உண்மையில் ஒரு பெண்ணின் உடலுக்குள் இருந்த குழந்தை தான் ஸ்ரீதேவி. யார் இறந்தாலும் நான் 'ரெஸ்ட் இன் பீஸ்' என சொல்ல மாட்டேன். ஸ்ரீதேவியியைப் பொறுத்தவரை அதை சொல்ல விருப்பப் பட்டேன். மரணத்தால், அவருக்கு அமைதி கிடைக்கட்டும் என நம்பினேன்.
என்னுடைய சொந்த அனுபவத்தில், ஆக் ஷன், கட் என காமிராவுக்கு முன்னால் மட்டும் அவரை அமைதியாகப் பார்த்தேன். அவருக்கு வலியைக் கொடுத்த வாழ்க்கையிலிருந்து விலகி, நீண்ட தூரம் சென்று விட்டார். அதனால் தான் அவர் இனி அமைதியாக இருப்பார் என்கிறேன்.
நாங்கள் ரசிகர்கள், நெருங்கியவர்கள் உங்களை அதிகமாக சோர்வடைய வைத்திருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தீர்கள்.நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான பறவையாக, உண்மையான அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் பறந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.நான் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போது அதை நம்புகிறேன்.
அடுத்த பிறவி யில், உங்களை நாங்கள் காண வேண்டும். அப்போது நாங்கள், திருத்தங்களைச் செய்து எங்களைத் தகுதியுள்ளகளாக மாற்றி, உங்களுக்கு மரியாதை அளிக்கிறோம். கண்களில் வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு, அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (34+ 26)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply