காஷ்மீரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள்... ஊடுருவல்? போலீஸ் சந்தேகம்; மத்திய அரசு மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஊடுருவல்?
காஷ்மீரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள்...
போலீஸ் சந்தேகம்; மத்திய அரசு மறுப்பு

ஸ்ரீநகர்,: ஜம்மு - காஷ்மீரில், போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து, தீவிர விசாரணை நடத்திய போலீஸ், டி.ஜி.பி., வைத், இது போன்ற அச்சுறுத்தல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என, போலீசார்
சந்தேகிக்கும் நிலையில், மத்திய அரசு, இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காஷ்மீரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள்... ஊடுருவல்? போலீஸ் சந்தேகம்; மத்திய அரசு மறுப்பு


ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் பதுங்கியிருக்கும், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், நாச வேலைகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை ஒடுக்க, மாநில போலீசார், ராணுவம், துணை ராணுவப்படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி
வருகின்றனர்.இதற்கிடையே, சமீபத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலுக்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பொறுப்பேற்றுஉள்ளது.

அதிர்ச்சி



வலைதளத்தில், இது குறித்து பதிவிட்டுள்ள, ஐ.எஸ்., அமைப்பினர், போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாதிகளின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த, மாநில போலீஸ், டி.ஜி.பி., வைத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, வைத் மேலும் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சந்தேகத்திற்குரிய இடங்களில்
அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. சில இடங்களில், நம் வீரர்கள் தாக்கப்பட்டாலும், பயங்கரவாதிகள் பலர் கைது

செய்யப்பட்டுள்ளனர்; சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.
ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த அதிகாரபூர்வ ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும், கடந்த காலங்களில் நடந்தபயங்கரவாத சம்பவங்கள், அதற்கு அந்த அமைப்பினர் பொறுப்பேற்பதாக அறிவித்த அறிவிப்புகள் ஆகியவை, ஐ.எஸ்., அமைப்பினர் குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.இங்கு, ஐ.எஸ்., அமைப்பிற்காக ஆள் சேர்ப்பு பணியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களை சுற்றி வளைக்கும் பணி, முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மறுப்பு



இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டதற்கு, பாக்., ஆதரவு, லஷ்கர் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம்' என, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திறம்பட செயலாற்றி வருவதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவ வாய்ப்பில்லை என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பதாக, போலீஸ் டி.ஜி.பி., வைத் கூறியுள்ள நிலையில், ஐ.எஸ்., அமைப்பினர் ஊடுருவ வாய்ப்பில்லை என, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாணவர்கள் தவிப்பு



ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, எல்லையோர கிராமங்களில், பாக்., படையினர் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில், நம் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.இதனால், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ரஜோரி மாவட்டத்தில், எல்லையோர கிராமங்களில் உள்ள பள்ளிகள்

Advertisement

அருகே, பாக்., ராணுவ தாக்குதல் அதிகரித்துள்ளதால், பள்ளி சென்ற குழந்தைகள், வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர், பள்ளிகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில், பள்ளி
களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி பலி



ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். நீண்ட நேர சண்டைக்குப் பின், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. எனினும், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி பலியானான்.
உயிரிழந்த பயங்கரவாதி குறித்த தகவல்களை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ராஜ்நாத் - மெஹபூபா சந்திப்பு


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, முதல்வர், மெஹபூபா முப்தி, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கிடம், நேற்று, டில்லியில் நேரில் விளக்கம் அளித்தார். மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மெஹபூபாவிடம், அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். இந்த
சந்திப்பு, 20 நிமிடங்கள் வரை நீடித்தது.இதற்கிடையே, ராணுவ உயர் அதிகாரி, ஏ.கே.பட், நேற்று முன்தினம், அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, இந்தியா - பாக்., எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விளக்கினார். பெரும் எண்ணிக்கையிலான பயங்கராவதிகள், பாக்., பகுதியிலிருந்து, பயங்கர ஆயுதங்களுடன், நம் நாட்டிற்கு ஊடுருவ காத்திருப்பதாகவும், அதனால், எல்லையில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement