சென்னை : 'சட்டசபையில், ஜெயலலிதா படம் வேண்டாம் என, மக்கள் நினைத்தால், அது, வரும் தேர்தலில் எதிரொலிக்கும்; தற்போது, சபாநாயகரின் அதிகார வரம்புக்குள், நீதிமன்றம் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெ., உருவப்படம், பிப்., 12ல், திறக்கப்பட்டது. சபாநாயகர், தனபால் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில், முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
சட்டசபையில் திறக்கப்பட்ட, ஜெ., உருவப்படத்தை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் மனு தாக்கல் செய்தார். மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அன்பழகன் தரப்பில்,
மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் வாதாடியதாவது:
அதிருப்தி
சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., குற்றம் புரிந்திருப்பதாக, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அவரது படத்தை திறப்பது,தவறான முன்னுதாரணமாகி விடும். 'சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு, பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடக் கூடாது' என, உச்ச நீதிமன்ற உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனபால், தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். அதற்கான குழுவிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. சட்டசபையில், ஜெ., படத்தை திறந்தது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற வகையில், பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, எம்.எல்.ஏ.,வுக்கு உள்ளது.
இவ்வாறு வில்சன் வாதாடினார்.
தேர்தலி்ல் பிரதிபலி்க்கும்
உடன், தலைமை நீதிபதி, ''பொது மக்களுக்கு அதிருப்தி, எதிர்ப்பு இருந்தால், அது, தேர்தலில் பிரதிபலிக்கும். தேர்தலில்வெற்றி பெற்று வரும் போது, ஜெ., உருவப்படம் குறித்து, அப்போதைய சபாநாயகர்
முடிவு எடுத்துக் கொள்ளட்டும். தற்போது, சபாநாயகரின் முடிவில், நீதிமன்றம்
தலையிட முடியாது. தனி மனித உரிமை
தொடர்பான வழக்கு என்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை, நீதிமன்றம் விசாரித்தது,'' என்றார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர், வில்சன், ''குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரின் படத்தை, சட்டசபையில் திறந்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நீதிபதியின் படத்தை, நீதிமன்ற வளாகத்தில் திறக்க, குழு அனுமதிக்குமா? சபாநாயகரின் நடவடிக்கைகள், முடிவுகள், அரசியலமைப்பு சட்டப்படி உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆராயலாம்.
''அரசு அலுவலகங்களில், யார் யார் படங்கள் வைக்கலாம் என்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கும், நிலுவையில் உள்ளது. சட்டசபை கட்டடமும், அரசு கட்டடம் தான். எனவே, இந்த இரண்டு வழக்குகளையும், ஒன்றாக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.இதை தொடர்ந்து, விசாரணையை, மார்ச், 2க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply