புதுடில்லி: பஞ்சாப் மாநில முதல்வர், அமரீந்தர் சிங்கின் மருமகன் துணை இயக்குனராக உள்ள, உ.பி.,யைச் சேர்ந்த சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
மோசடி
இங்குள்ள சிம்போலியைச் சேர்ந்த, தனியாருக்கு சொந்தமான சிம்போலி சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங்கின் மருமகன் மீதும் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:சிம்போலி சர்க்கரை ஆலை
நிறுவனத்துக்கு, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், 2011ல், 150 கோடி ரூபாய்
கடன் அளித்தது.ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, சிறப்பு திட்டத்தில் இந்தக் கடன் வழங்கப்பட்டது.ஆனால், இந்தப் பணம் விவசாயிகளுக்கு தரப்படவில்லை. இதற்கிடையே, 2015, மார்ச்சில்,
இந்தக் கடன், வாராக் கடனாக மாறியது. இந்தப் பணத்தை, நிறுவனம் வேறு வழியில் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 2015, ஜூனில், மோசடி செய்ததாக புகார் கூறப்
பட்டுள்ளது.
வழக்கு பதிவு
இந்நிலையில், பழைய கடனை அடைப்பதற்காக, சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு, 2015ல், 110 கோடி ரூபாய் மதிப்புள்ளமற்றொரு கடனை, ஓரியன்டல் வங்கி வழங்கியுள்ளது; இதுவும் வாராக் கடனாகி உள்ளது. இந்த நிறுவனம், 109 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில்,
ஓரியன்டல் வங்கி புகார் கூறியது.அதனடிப்படையில், முதல்கட்ட விசாரணைக்குப் பின், அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், டில்லி மற்றும், உ.பி.,யில் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை செய்யப்பட்டது.
இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின், உயர் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அந்த சர்க்கரை ஆலையின் துணை இயக்குனராக உள்ள, குர்பால் சிங், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கின் மகள் இந்தர் கவுரின் கணவர். இவர், எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குனராக உள்ளதும் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து