மும்பை: பிரபல நடிகை, ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 'அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார். இறக்கும்போது குடிபோதையில் இருந்துள்ளார்' என, பிரேத பரிசோதனையில், 'பகீர்' தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் உறவினர்களிடம், துபாய் போலீசார் விசாரித்து வருகின்றனர். சட்ட நடைமுறைகள் முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இன்று மும்பையில் இறுதிச் சடங்கு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 50 ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த, பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54, வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்ஸின் துபாய் நகருக்கு திருமணத்துக்கு சென்றபோது, உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது; இது, அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேத பரிசோதனை
ஸ்ரீதேவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், திடீர் திருப்பமாக, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின், குளியறையில் இருந்த குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழந்துள்ளார். இறந்தபோது, சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். மேலும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல், அவரது குடும்பத்தார், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, துபாய் போலீசார் கூறியதாவது: பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மாரடைப்பில் இறக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி தான்
உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்செயலாக அவர் குளியல்
தொட்டியில் மூழ்கி இறந்ததால், அது ஒரு விபத்தாகவே எடுத்துக்
கொள்ளப்படுகிறது. இருப்பினும், அவர் மரணமடைந்த நேரத்தில், அவருடன் யார்
யார் இருந்தனர் என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு
போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனை நடவடிக்கைகள்
முடிந்து, 'எம்பாமிங்' எனப்படும், உடல் அழுகாமல் இருப்பதற்கான,
பதப்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்த வழக்கு, அரசு சட்டத் துறைக்குமாற்றப்பட்டுள்ளதாக, துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்ரீதேவியின் உடல், இன்று மும்பை எடுத்து வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அவரது ரசிகர்களிடையே, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 'ஸ்ரீதேவி மாரடைப்பில் இறந்ததாக, முதலில் தகவலை கசிய விட்டது யார்; எங்கு மது அருந்தினார்; அப்போது, வருடன் யார் யார் இருந்தனர்' என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இந்த மரணத்தில், பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக, அவரது ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊரில் அஞ்சலி
நடிகை ஸ்ரீதேவிக்கு, அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டி துவக்க பள்ளியில், மாணவர்கள், இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி, ஸ்ரீதேவி சொந்த ஊர். அவர் இறந்தது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதேவியின் பெரியப்பா ராமசாமி பெயரில், அவரது உறவினர்கள், 2005ல் மீனம்பட்டி தெற்கில், 'பாரதி தொடக்க பள்ளி' துவக்கினர்.
இப்பள்ளி, தற்போது அரசு உதவி பெறும் பள்ளியாக உள்ளது. இங்கு நேற்று,
தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமையில், மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கடைசி நிமிடங்கள்
துபாயில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்ற, நடிகைஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர், இரண்டாவது மகள் குஷியுடன், மும்பைக்கு திரும்பி விட்டார். முதல் மகள் ஜான்வி, அறிமுகமாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், அவர் துபாய்க்கு வரவில்லை.
திருமணம் முடிந்த பின், ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், போனி கபூர் மீண்டும் துபாய்க்கு சென்றுள்ளார்.
கடந்த, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிறிது நேரம் இருவரும் பேசினர். இரவு விருந்துக்கு செல்வதற்கு தயாராவதற்காக, ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றபோது தான், உயிரிழந்தார்.
குளியல் அறைக்கு சென்று, 15 நிமிடங்கள் ஆகியும், அவர் வெளியே வராததால், போனி கபூர் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி அசைவில்லாமல் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக, துபாயில் உள்ள நண்பருக்கும், பின், போலீசுக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவி, ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளியாகும், பிரபல ஆங்கில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனி கபூருக்கு சிக்கல்?
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை, தனக்கு திருப்தி அளிக்கவில்லை என, துபாய் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக, நேற்று இரவு தகவல் வெளியானது. குறிப்பாக, ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூரிடம், விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், பல்வேறு சந்தேகங்களுக்கு, அவரிடமிருந்து பதில்களை பெற வேண்டியுள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் திடீரென, துபாயிலிருந்து மும்பைக்கு வந்து, பின், மீண்டும் துபாய்க்கு செல்ல வேண்டிய காரணம் என்ன என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போனி கபூரிடம், போலீசார் விசரணை நடத்தவுள்ளனர். ஸ்ரீதேவி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், போலீசார் ஆய்வு செய்யவுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து