சென்னை, : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், இதுவரை ஆஜரானவர்கள் அளித்த வாக்குமூலம் தொடர்பான, 2,956 பக்க ஆவணங்கள், சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை பெற்ற பின், சசிகலா தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷனில், 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்களில் பலர், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, பதில் அளிக்க கோரி, விசாரணை கமிஷன், 2017 டிச., 21ல், சசிகலாவுக்கு, 'சம்மன்' அனுப்பியது.
சசிகலா மீது புகார் தெரிவித்தவர்கள் விபரம், அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டு விபரங்களை தருவதுடன், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தவும், அனுமதிக்க வேண்டும் என, சசிகலா சார்பில், அவரது வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, 'கமிஷனில் ஆஜராகி, விளக்கம் அளித்தவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த விரும்பினால், மனு தாக்கல் செய்யலாம்' என, சசிகலா தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த விபரங்களை பெற்ற பின், ஏழு நாட்களுக்குள், பிரமாண பத்திரம் தாக்கல்
செய்ய வேண்டும் என்றும், சசிகலா தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, '22 பேர் அளித்த சாட்சியங்கள்
மட்டுமே, சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ளன; அது மட்டும் போதாது. அவர்கள்
தாக்கல் செய்த ஆவணங்களையும் வழங்க வேண்டும்' என, விசாரணை கமிஷனில், சசி
தரப்பினர் மனுசெய்தனர்.
இந்நிலையில், நேற்று சசிகலாவின் வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், விசாரணை கமிஷன் வந்தார். அவரிடம், 2,956 பக்கங்கள் உடைய ஆவணங்களை, விசாரணை கமிஷன் வழங்கியது. எனவே, சசிகலா தரப்பில், விரைவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது:
சசிகலா சார்பில், நாங்கள் தாக்கல் செய்த மனுவை, பிப்., 5ல், நீதிபதி விசாரித்தார். எங்களுக்கு அனைத்து ஆவணங்களையும் தரும்படி உத்தரவிட்டார். விசாரணை கமிஷனுக்கு வந்த, 102 புகார்கள், 142 மனுக்கள், 28 பிரமாண பத்திர வாக்குமூலங்கள் போன்றவற்றை கேட்டோம்; அவற்றை தரவும், நீதிபதி உத்தரவிட்டார்.
ஆவணங்களை பெற முயற்சித்து வருகிறோம்
கமிஷன் சார்பில், ஆவணங்களைப் பெற, 7,200 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றனர்; செலுத்தினோம். எங்களிடம், 'ஆவணங்கள் உடனே கொடுத்து விடுவர். பிப்., 26ல், சசிகலா சார்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி கூறியிருந்தார். ஆனால், எங்களுக்கு, இதுவரை ஆவணங்கள் வழங்கவில்லை. ஆவணங்கள் வழங்கிய நாளில்
இருந்து, சசிகலா சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, 15 நாட்கள் கால
அவகாசம் கேட்டு, மனு கொடுத்துள்ளோம். நீதிபதி இல்லாததால், செயலரிடம் மனு
கொடுத்தோம்.
அப்போது அவர், ஆவணங்களை பெற்றுச் செல்லலாம் என்றார். அதனால், 2,956 பக்கங்கள் உள்ள ஆவணங்களை வாங்கி உள்ளோம். நாங்கள் கேட்ட அவகாசம் கொடுத்தால், குறிப்பிட்டபடி, சசிகலா தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும். நீதிமன்றத்தில் சாட்சி அளித்தவர்களின் ஆவணங்கள் வழங்கப்படவில்லை. கமிஷன், நேரடியாக அழைத்து விசாரித்த, 10 பேர்; கமிஷனில் மனு செய்த, ஆறு பேர் கொடுத்த ஆவணங்களை வழங்கி உள்ளனர்.
போலீஸ் விசாரணையில், குற்றப்பத்திரிகை நகல் கொடுப்பர். அதன் அடிப்படையில், கேள்விகள் தயாரித்து, விசாரணை நடத்துவோம். விசாரணை கமிஷனில், விசாரணைக்கு அழைக்கப்படுபவர், என்ன கூறினார் என்பதை அறிந்த பின் தான், குறுக்கு விசாரணை நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வாரம், 'லீவு
ஜெ., விசாரணை கமிஷனில், இன்று ஜெ.,க்கு டிரைவராக இருந்த கண்ணன்; நாளை, இளவரசி மகன், விவேக்; மார்ச், 2ல், போயஸ் கார்டன் சமையலர், சேகர் ஆகியோர் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நீதிபதி ஆறுமுகசாமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், இந்த வாரம் நடைபெறவிருந்த விசாரணை, அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து