கோவை: 'டுவிட்டர்' மூலம் புகார் சொன்ன ரயில் பயணியின் குறையை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உடனடியாகத் தீர்த்து வைத்தார்.
கோவையை அடுத்த, கோவைப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35. இவர், சேலம் மாவட்டம், சங்ககிரியில், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து சங்ககிரிக்கு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், 'எஸ் - 13' பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
இவரது படுக்கை, கழிவறைக்கு அருகே அமைந்திருந்தது. கழிவறை சரிவர சுத்தம்
செய்யப்படாமல் இருந்ததால், துர்நாற்றம் வீசியது. ராஜ்குமார், தன் டுவிட்டர் கணக்கில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்குகழிவறை பிரச்னையை, 'டுவிட்' செய்திருக்கிறார்.
சற்று நேரத்தில், இந்திய ரயில்வே சேவா அமைப்பில் இருந்து, 'தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவலை அனுப்பி இருக்கிறோம். தங்கள், பி.என்.ஆர்., எண்ணைத் தாருங்கள்' என, டுவிட்டரில் பதில் வந்திருக்கிறது.
ராஜ்குமார், பி.என்.ஆர்., எண்ணை அனுப்பி வைக்க, 'உங்கள் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துவைக்கிறோம்' என, டுவிட்டர் மூலமே தகவல் வந்தது.
அரக்கோணத்துக்கு நள்ளிரவு, 12:00 மணிக்கு ரயில் வந்தது. அங்கு, ரயில் நிலைய அதிகாரியுடன், நான்கு துப்புரவு பணியாளர்கள்
தயாராக நின்றனர். அவர்கள், கழிவறையை சுத்தம் செய்து முடித்து, ராஜ்குமாரிடம் தெரிவித்து சென்றனர்.
'தீர்வுக்கு மகிழ்ச்சி'
ராஜ்குமார் கூறுகையில், ''நள்ளிரவு நேரத்தில், நான் அனுப்பிய புகாரை கவனத்தில் எடுத்து, உடனடியாகத் தீர்த்து வைத்த ரயில்வே அமைச்சரின் சுறுசுறுப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து