ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் | ஐந்து வருடங்கள் ஆறப்பட்ட கதை | ரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல் | கெட்டப்பை மாற்றும் சிவகார்த்திகேயன் | அஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா? | கரு பட யூனிட்டை வியக்க வைத்த சாய் பல்லவி | மகாநதியில் நடிக்க மறுத்த அனுஷ்கா | பிகினிக்கு மறுப்பு சொன்ன அனுபமா | ஸ்ரீதேவியின் கடைசி படம் ஜீரோ |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் தன்னுடைய தடத்தை தன் அழகாலும், நடிப்பாலும் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்னர் தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக நாயகியாக அறிமுகமாகி மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்து இந்தியாவின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர்.
ஸ்ரீதேவி என்று சொன்னதுமே 16 வயதினிலே மயிலு கதாபாத்திரத்தையும், மூன்றாம் பிறை விஜி கதாபாத்திரத்தையும் ரசிகர்களால் மறக்க முடியாது. 40 வயதைக் கடந்தவர்களுக்கும், தமிழ் சினிமாவின் கடந்த காலப் படங்களைப் பார்த்து ரசித்தவர்களுக்கும் ஸ்ரீதேவி என்றுமே கனவுக் கன்னிதான்.
ஆணாதிக்கம் கொண்ட இந்திய சினிமாவில் ஒரு நாயகியாக அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று காத்திருந்தவர்கள் பலர். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த நாயகி இவ்வளவு சீக்கிரம் இறைவனடி சேருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஸ்ரீதேவி ஹிந்தியில் நடிக்கச் சென்றாலும் தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலேயே அவரது திறமையை தனித்துவமாக பதித்துச் சென்றவர். அப்போதே அவருடைய கதாபாத்திரங்களைப் பற்றிப் பேச வைத்தவர். அப்படி அவருடைய நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
மூன்று முடிச்சு (1976)
இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடிக்கும் போது அவருக்கு வயது 14 மட்டுமே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி கூட்டணி முதன் முதலில் உருவான படம். தன் காதலன் கமல் மரணத்திற்குக் காரணமான ரஜினிக்கே சித்தியாகி அவருக்குப் பாடம் புகட்டும் செல்வி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி. அவ்வளவு சிறிய வயதில் ஒரு மெச்சூர்டான கதாபாத்திரத்தில், நாயகியாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
16 வயதினிலே (1977)
மயிலு இன்றும் தமிழ் சினிமாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு நாயகியின் கதாபாத்திரப் பெயர். செந்தூரப் பூவே... என்று கள்ளம் கபடம் இல்லாத அழகு முகத்துடன் ஸ்ரீதேவி பாடி நடித்த போது மயங்கிய ரசிகர்கள் ஏராளம், ஏராளம். ஒரு கிராமத்துப் பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த இந்த மயிலு கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நாயகியின் கதாபாத்திரமாக அமைந்தது. ஸ்ரீதேவியின் அந்த சிரிப்பு இன்றும் பலரின் கண்முன் நிழலாடும்.
சிகப்பு ரோஜாக்கள் (1978)
ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் சாரதா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீதேவி. படம் முழுவதுமே புடவையிலேயே வருவார். சராசரிப் பெண்ணாக, பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக இருப்பவருக்கு மனநலம் பாதித்த கமல்ஹாசன் கணவர். படம் முழுவதுமே ஸ்ரீதேவி பயப்படும் போதெல்லாம் ஐயோ அவருக்கு எதுவும் ஆகக் கூடாதே என ரசிகர்கள் பதைபதைப்புடன் படத்தைப் பார்த்தார்கள்.
ப்ரியா (1978)
ஒரு மாடர்ன் பெண்ணாக, நடிகையாக ப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியைப் பார்த்த படம். அட, அவர் இப்படி கூட நடிப்பாரா என ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம். பாடல் காட்சிகளில் ஸ்ரீதேவியின் அழகைக் கண்டு மயங்காதவர்கள் யாருமில்லை. அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றமான சினிமாவாக வந்து ஹிந்திப் படங்கள் அளவிற்கு பேசப்பட்ட ஒரு படம். டைட்டில் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி அதற்கான சிறப்பைக் கொடுத்திருந்தார்.
ஜானி (1980)
ஸ்ரீதேவியின் படங்களில் மற்றுமொரு மறக்க முடியாத படம். ஸ்ரீதேவியின் சோலோ பாடல்கள் இன்றும் ரசிகர்களைத் தாலாட்டுக் கொண்டிருக்கிறது. பாந்தமான அழகு என்று சொல்வார்கள். அந்த அழகு இந்தப் படத்தின் பாடகி அர்ச்சான கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியால் வெளிப்பட்டது. எந்தக் கவர்ச்சியும் இல்லாமல், வெறும் புடவையிலேயே படம் முழுவதும் கண்ணியமாக நடித்து ஒரு நாயகியால் இப்படியும் ரசிகர்களைக் கவர முடியுமா என வியக்க வைத்தார்.
வறுமையின் நிறம் சிவப்பு (1980)
கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் ஒரு நாயகி நடிக்க வேண்டும் என்பதை அந்தக் காலத்திலேயே சரியாகச் செய்தவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி. அழகால் மட்டும் ரசிகர்களைக் கவராமல் அற்புதமான கதாபாத்திரங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தப் படத்தில் நாடக நடிகை தேவி கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார்.
மூன்றாம் பிறை (1982)
மனலம் தவறிய அந்த விஜி கதாபாத்திரம் இன்னமும் எந்த ஒரு நடிகையாலும் அவ்வளவு சிறப்பாக செய்ய முடியவில்லை என்று சொல்லலாம். படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசனுக்கு தேசிய விருது கொடுத்தது தவறு, படத்தின் நாயகியான ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் அப்போது கருத்து தெரிவித்தார்கள். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் தேசமே பாராட்டும் ஒரு நடிகையாக இந்தப் படத்தின் ரீமேக்கான சத்மா மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நுழைந்தார் ஸ்ரீதேவி.
வாழ்வே மாயம் (1982)
கமல்ஹாசன், ஸ்ரீதேவி காம்பினேஷன் என்றாலே அந்தக் காலத்தில் அது மிகச் சிறந்த காதல் படமாக இருக்கும் என ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுப்பார்கள். ஒரு ஏர்-ஹோஸ்டஸ் ஆக அவ்வளவு அழகாக இருப்பார் ஸ்ரீதேவி. அவரை விடாமல் துரத்திக் காதலிக்கும் கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிவார். ஸ்ரீதேவியின் அழகுக்காகவே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பலர்.
அடுத்த வாரிசு (1982)
கமல்ஹாசன், ஸ்ரீதேவி காம்பினேஷன் எப்படி காதல் காம்பினேஷன் ஆக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ, அதே போல வெற்றி காம்பினேஷன் ஆக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கூட்டணி ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கூட்டணி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி அவ்வளவு இனிமையாக இருக்கும். நாடோடிப் பெண்ணாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு ரஜினிகாந்த் பாடம் சொல்லிக் கொடுப்பதும், பின்னர் இளவரசியாக ஸ்ரீதேவியை நடிக்க வைப்பதும் சுவாரசியமானவை. இரு விதமான தோற்றங்களிலும் அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி என்ற சிறந்த நடிகையை அறிமுகப்படுத்தி, உருவாக்கி வளர்த்தது தமிழ் சினிமாதான். அந்தக் காலத்திலேயே சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனால்தான், அவர் மறைந்த பின்னும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள ஒரு நாயகியாக ஜொலிக்கிறார்.
மயிலு, சாரதா, அர்ச்சனா, ப்ரியா, விஜி, தேவி, வள்ளி என அவருடைய கதாபாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
ஸ்ரீதேவியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ...“ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது...” என்ற “மூன்றாம் பிறை” பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எங்கே சென்றாலும் தமிழ் சினிமா உலகம் உங்களை மறக்காது.