நடிகர்கள் கமல், ரஜினியின் கட்சிகளுக்கு, தி.மு.க., அதிருப்தியாளர்கள் ஓட்டம் பிடிப்பதை தடுக்க, ஸ்டாலின் இரு திட்டங்களை வகுத்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில், கமல், ரஜினியின் வரவால், அ.தி.மு.க., - தி.மு.க., பலவீன மடையும் என்ற கருத்து, பரவலாக நிலவுகிறது. முதல்வர் பதவியை கைப்பற்ற துடிக்கும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினுக்கு, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம், முட்டுக் கட்டையாக இருக்குமோ என்ற,கேள்வி எழுந்து உள்ளது. எனவே தான், கமல், ரஜினியை காகிதப்பூ என்றும், அதற்கு மணம் இருக்காது என்றும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
புதிய வழி:
மேலும், தி.மு.க.,வில்,
தற்போது பதவி இல்லாமல் அதிருப்தியாளர்களாக உள்ளவர்கள், கமல், ரஜினியின் கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விடாமல் தடுக்க, இரு திட்டங்களை,
ஸ்டாலின் வகுத்து உள்ளார். முதல் திட்டமாக, ஒருவருக்கு ஒரு பதவி என்ற, புதிய
விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி, கட்சியில், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளில் இருப்போர், உடனடியாக, ஏதாவது ஒரு பதவியில் இருந்து, தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும்; ராஜினாமா செய்த பதவிக்கு, புதியவரை நியமிக்க வேண்டும்.
அந்த விபரத்தை,மார்ச், 31க்குள் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., பொதுசெயலர், அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் பதவிகள்
இரண்டாவது திட்டம், கூடுதல் மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக் குள், இருமாவட்டச் செயலர்களின் பகுதிகள் இடம்பெறுகின்றன.ஒரு தொகுதியில், கட்சி நிகழ்ச்சி நடந்தால், இரண்டு மாவட்டச் செயலர்கள்
பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், யார் பெரியவர் என்ற, போட்டி
உருவாகி, கோஷ்டிப் பூசலுக்கு வழி வகுக்கிறது.எனவே, இரு மாவட்டங்கள்
இடம்
பெறும் தொகுதிகளை கணக்கெடுத்து, அத் தொகுதிகளை மறு சீரமைத்து, கூடுதல் மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்தத் திட்டத்தால், தற்போது உள்ள, 65 மாவட்டங்களை விட, கூடுதலாக, சில மாவட்டங்கள் உதயமாக வாய்ப்பு உள்ளது. அப்படி பிரிக்கப்படுகிற மாவட்டங்களுக்கான பதவிகளை, அதிருப்தியாளர்களுக்கு வழங்கு வதன் மூலம், அவர்கள், கமல், ரஜினியின் கட்சிகளுக்கு ஓட்டம் பிடிப்பதை தடுக்க முடியும் என, ஸ்டாலின் கருதுகிறார். இத்திட்டத்தை நிறைவேற்ற, தி.மு.க.,வில் தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து