சென்னை:நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற, கட்சியை துவக்கியுள்ள நிலையில், சென்னையில், நேற்று தன் மன்ற நிர்வாகிகளை அழைத்து, நடிகர் ரஜினி, அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின், ''தமிழக அரசியலில், நானும், கமலும் பயணிக்கும் பாதை, வேறு வேறு,'' என, அறிவித்தார்.
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை, கமல் துவங்கினார். அதன் மாநில, மாவட்ட நிர்வாகிகளையும்,
அப்போதே அறிவித்தார். இதையடுத்து, ரஜினி தரப்பிலும், நேற்று அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ரஜினிக்கு சொந்தமான,சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அதில், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன், நடிகர்
ரஜினியும் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:அரசியலில், எந்த
விஷயத்தை யும் கவனமாக கையாள்வது அவசியம். ஒரு தலைவனாக, நான் சரியாக
இருக்கிறேன்.
மக்கள் இயக்கம், 32 ஆண்டுகளாக, கவனத்துடன்
திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. அதை, மேலும் பலப்படுத்துவதே நோக்கம்.என்
ரசிகர்களுக்கு, யாரும் அரசியல் பாடம் கற்றுத்
தர தேவையில்லை. அவர்கள் தான், மற்றவர் களுக்கு பாடம் கற்றுத் தருவர். மிகப்பெரிய கட்சிகளின் வெற்றிக்கு, அந்தக் கட்சிகளின் கட்டமைப்பே பலமாக
இருந்தது. அதனால், தோல்விகளை சந்தித்தாலும், கட்சி பாதிக்கப் படவில்லை.
மற்றவர்கள், எந்த சத்தம் போட்டாலும் பரவாயில்லை. நாம், நம் வேலையை அமைதியாக பார்ப்போம். குடும்பத்திற்குள் ஒற்றுமை எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி, கட்சிக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம் ரஜினி கூறியதாவது:
கமலின்
முதலாவது அரசியல் கூட்டத்தை பார்த்தேன்; நன்றாக இருந்தது. அவர் திறமைசாலி;
சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் நலனுக்காக,
இருவரும் வெவ்வேறு பாதையில்சென்றாலும், போய் சேரும் இடமும், நோக்கமும் ஒன்று தான்.மாவட்டங்களில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது, என் முதல் பணி. அதன்பின், சுற்றுப்பயணம் செய்து, ரசிகர்கள் அனைவரை யும் சந்திப்பேன். காவிரி விவகாரத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் மாநாடு
காந்திய மக்கள் இயக்க தலைவர், தமிழருவி மணியன் ஏற்பாட்டில், கோவையில், மே, 20ல், மாநாடு நடத்தப்பட உள்ளது. அதில், முதல்வர் வேட்பாளராக, ரஜினியை அறிவிக்க உள்ளனர்.
இது குறித்து, தமிழருவி மணியன் கூறியதாவது:தமிழக அரசியலுக்கு, ரஜினி வர வேண்டியது அவசியம். இதை வலியுறுத்தி, திருச்சியில் மாநாடு நடத்தினோம். இப்போது, ரஜினி அரசியலுக்கு வந்து விட்டார். இனி, அவரை முன்னிலைப்படுத்த வேண்டும்.
கோவையில், மே, 20ல், மாற்று அரசியல் மாநாட்டை நடத்துகிறோம். அதில், ரஜினியை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளோம். தமிழகத்தில், மாற்று அரசியல் எப்படி மலரும் என்பதை, அந்த மாநாட்டில் விரிவாக சொல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து