காவிரி நதி நீர் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, முதல்வர் பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அதில், பேசியவர்கள் விபரம்:
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்க உறுதி செய்யப்பட்டது. அதன்படி, எந்த மாதத்திலும், தண்ணீர் திறந்து விட, கர்நாடக அரசு முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் நாம், உச்ச நீதிமன்றத்தை அணுகி, உத்தரவு பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.இந்த நெருக்கடியான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம், 192 டி.எம்.சி., தண்ணீரை, 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
எனினும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் திட்டத்தை, ஆறு வாரத்திற்குள், மத்திய அரசு உருவாக்க வேண்டும் என, தீர்ப்பளித்துள்ளது, ஆறுதலாக உள்ளது.ஒவ்வொரு முறை நியாயம் கேட்டு செல்லும் போதும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய, காவிரி நீரின் அளவு குறைக்கப்படுவதை, நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு, நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. இதில், தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரங்களுக்குள் உருவாக்க, மத்திய அரசுக்கு, நாம் போதிய அழுத்தம் தர வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களையும், முதல்வர் அழைத்துச் சென்று, பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியத்தை, முதலில் அமையுங்கள் என, வலியுறுத்த வேண்டும்.தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட, 14.75 டி.எம்.சி., தண்ணீரை திரும்பப் பெற, என்ன வழி என, சட்ட ரீதியாக அரசு ஆலோசித்து, அதை அனைத்து கட்சிகளிடம் தெரிவித்து, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்.
காவிரி நீர் சேமிப்பு, சிக்கனம் உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும், நாம் ஈடுபட வேண்டும். காவிரி உரிமையை நிலைநாட்ட, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், தி.மு.க., முழு ஆதரவை அளிக்கும்.
தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை:
காவிரியில் கிடைக்கும் தண்ணீரை பெற, முழுமையாக முயற்சிக்க வேண்டும். இதுவரை, 50 டி.எம்.சி., தண்ணீர் கூட தந்ததில்லை. உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தண்ணீரை பெற, தமிழக, பா.ஜ., துணை நிற்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில், தமிழக அரசுக்கு, தமிழக, பா.ஜ., ஒத்துழைப்பு அளிக்கும்.
காவிரியில், 36 கிளை நதிகள் உள்ளன. அவற்றில் துணை அணை கட்டி, தண்ணீரை சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை துார்வாரி பாதுகாக்க வேண்டும். குறைந்த தண்ணீரில், நிறைந்த மகசூல் பெறும் திட்டங்களை, அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர்:
'காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்னும், ஐந்து வாரங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.நிலத்தடி நீரை காரணம் காட்டி, காவிரியில் வழங்க வேண்டிய, தண்ணீரின் அளவை குறைத்துள்ளனர். நிலத்தடி நீர் தொடர்பாக, சமீபத்தில், எந்த சர்வேயும் நடக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன், எடுக்கப்பட்ட சர்வேயை கணக்கில் எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அறிவித்த தண்ணீரை முழுமையாக பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, மேலாண்மை வாரியம் அமைக்க, அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன்:
அனைத்து தலைவர்களும், முதல்வர் தலைமையில், பிரதமரை சந்தித்து, அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்குமா என்ற, சந்தேகம் உள்ளது. ஏற்கனவே, இதுபோல் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தபோது, 'அவ்வாறு அமைக்க முடியாது' எனக் கூறியது. எனவே, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.ஒருவேளை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசு தயாராக இல்லை என்றால், தமிழக, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா:
தமிழக சட்டசபையை கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை, முதல்வர் அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில், நீர்நிலைகளை பாதுகாக்க, தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன்:
இன்னும், 15 ஆண்டு கள், நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. உச்ச நீதிமன்றம் கூறியபடி, ஆறு மாதங்களுக்குள், மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கு, அனைத்து கட்சி தலைவர்களையும், முதல்வர் அழைத்துச் சென்று, பிரதமரை வலியுறுத்த வேண்டும். மீண்டும் நீதிமன்றம் சென்றால், நமக்கு பாதிப்பு ஏற்படும். அதை தவிர்த்து, மத்திய அரசு வழியாக தீர்வு காண வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ:
முதல்வர், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று, பிரதமரை சந்திக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை, உடனே அமைக்க வேண்டும்; கர்நாடக அரசு, புதிய அணைகள்
கட்ட அனுமதிக்கக் கூடாது என, வலியுறுத்த வேண்டும்.உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய வேண்டும். அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை, தமிழகம் உறுதியாக முன்வைக்க வேண்டும்.
த.மா.கா., தலைவர், வாசன்:
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நமக்கு கிடைக்க வேண்டிய நீரை, முழுமையாக பெறவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி:
காவிரி பிரச்னையில், மேல் முறையீடு செய்யக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, மறுசீராய்வு செய்ய, மனு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, அனைத்து கட்சியினரும், முதல்வர் தலைமையில், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
தே.மு.தி.க., அவைத் தலைவர், மோகன்ராஜ்:
அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமரை சந்தித்து, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, கூட்டாக வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தலைவர்களுக்கு சைவ உணவு:
சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து கட்சி கூட்டம், காலை, 10:30க்கு துவங்கியது. பகல், 2:00 மணிக்கு, உணவு இடைவேளை விடப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜ் பிரியாணி, சாதம், காரக்குழம்பு, ரசம், இரண்டு பொரியல், அப்பளம், இரண்டு ஸ்வீட், பீடா, புரூட் சாலட் போன்றவை வழங்கப்பட்டன.
வரவேற்ற டெல்டா அமைச்சர்கள்!
அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்தவர்களை, டெல்டா மாவட்ட அமைச்சர்கள், நுழைவாயிலில் நின்று வரவேற்றனர்.காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக, 2007ல், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. 11 ஆண்டுகள் கழித்து, நேற்று தமிழக அரசு சார்பில், காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசித்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
சென்னை, தலைமைச் செயலகத்தில், நாமக்கல் மாளிகை, 10வது தளத்தில் உள்ள அரங்கில் கூட்டம் நடந்தது. டெல்டா மாவட்ட அமைச்சர்களான, காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோர், கூட்டத்திற்கு வந்த, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை வரவேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்கும்படி, 39 அரசியல் கட்சிகளுக்கும், 14 விவசாய அமைப்புகளுக்கும், அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமைப்பு சார்பிலும், இருவர் பங்கேற்றனர். அரசு தரப்பில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துக்கள் அனைத்தும், உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply