அரசியல் பயணம் துவக்கினார் கமல்: கலாம் வீட்டில் புறப்பட்டவருக்கு உற்சாக வரவேற்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசியல் பயணம் துவக்கினார் கமல்
கலாம் வீட்டில் புறப்பட்டவருக்கு உற்சாக வரவேற்பு

திரையுலகில், 'சகலகலா வல்லவன்' என அறியப்படும் கமல், நேற்று முதல் அரசியல்வாதியானார். தன் அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வீட்டில் இருந்து துவங்கினார்.

அரசியல்,பயணம்,துவக்கினார்,கமல்,கலாம்,வீட்டில் புறப்பட்டவருக்கு,உற்சாக,வரவேற்பு


நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்த நடிகர் கமல், நேற்று காலை, 7:45 மணிக்கு, அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றார். அவரை, கலாம் சகோதரர் முத்துமீரா மரைக்காயர், அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அரை மணி நேரம் சந்திப்பு நீடித்தது.அப்போது, கலாம் பொன்மொழிகள் அடங்கிய நினைவு பரிசை, முத்துமீரா மரைக்காயர் வழங்கி, அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். கலாம் வீட்டில், கமலுக்கு காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தோசை, வடை, சாம்பார், நான்கு வகை சட்னியுடன், காலை உணவை முடித்தார்.


காலை, 8:15 மணிக்கு, வீட்டின் பின் பகுதி வழியாக கமல் வெளியேறி, மண்டபத்தில் உள்ள கலாம் படித்த அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்றார். 'அரசு பள்ளி மாணவர்களை, அரசியல்வாதிகள் சந்திக்க கூடாது' என, இந்து முன்னணியினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்ததால், கல்வித்துறை அனுமதி மறுத்தது. இதனால், பள்ளி மாணவர் சந்திப்பை கமல் தவிர்த்தார்.


தலையாய கடமை



ராமேஸ்வரத்தில் ஆடல், பாடல்கள், தாரை தப்பட்டையுடன், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், மீனவர்களை சந்தித்து, கமல் பேசியதாவது:தமிழகத்தில் மிக முக்கியமான தொழிலில், மீன் பிடித்தலும் ஒன்று. அந்த தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். உங்கள் சுக, துக்கங்களை நேரடியாக பேசுவதற்காக வந்தேன். என் ஆசை நிறைவேற, எனக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும்.தமிழக அரசியல்வாதிகள், வாய்க்கு வருவதை வாக்குறுதிகளாக அள்ளிக் கொடுத்து விடுகின்றனர். ஏன் அதை நிறைவேற்ற வில்லை என, மக்கள் கேட்கும் போது, ஏதேதோ பேசி, திசை திருப்பி விடுகின்றனர்.


ஓட்டளித்த மக்களுக்கு நன்றி சொல்லும் இடமாகவும், நல்ல கடமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் தான், அரசின் தலையாய கடமை.மீன் பிடிக்க செல்லும் போது, சர்வதேச சட்டங்களை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்ற விதம், மீனவர்கள் துயரங்களை துடைப்பதற்கான நிரந்தர தீர்வு குறித்து, நாம் பேசி தீர்க்க வேண்டும். அதற்கான தேதியை பின் அறிவிப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.மீனவர்களிடம் அதிக நேரம் பேசுவார், அவர்களின் கருத்துக்களை கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் முடித்து கொண்டார்.


நாட்டுப்பற்று



பின், கமல் அளித்த பேட்டி:


கலாம் எனது ஆதர்ச மனிதர். அவரது நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது. இதனால் தான், கலாம் இல்லத்தில், அரசியல் பயணம் துவக்க முடிவு செய்தேன். சித்தாந்தம்

எளிமையாக இருக்க வேண்டும். சித்தாந்தத்தை விட, மக்களுக்கு எது தேவை என்பதையும் சிந்திக்க வேண்டும்.திரையுலகில் எனக்கு ஏராளமான தடைகள் வந்தன. அதை எல்லாம் தகர்த்து, வெற்றி பெற்றேன். அதுபோல் தான் அரசியலிலும் நடக்கும். ரசிகர்களின் உள்ளங்களில் இதுவரை இருந்த நான், இனி அவர்களின் இல்லங்களிலும் இருப்பேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். உழைப்பு, உத்வேகம், அதற்கான ஆசை, நேரம் உள்ள எல்லோரும் அரசியலுக்கு வரலாம்.எனக்கு ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்து, 'உங்கள் ரசிகன் நான். உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், முடியாத சூழ்நிலை. நிச்சயம் நேரில் வந்து சந்திப்பேன். அரசியலில் கொள்கைகள் முக்கியமில்லை.


'மக்களுக்கு என்ன தேவை என்பது தான், முக்கியம். முதலில் மக்கள் தேவை குறித்து, பட்டியலிட்டு அதை நிறைவேற்றுங்கள்' என, ஆலோசனை வழங்கினார். என் மனதில் உள்ளதை அவர்பிரதிபலித்தார்.'கலாம் இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்க வில்லை' என சிலர் கூறுகின்றனர். இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை என்பதை, நான் வழக்கமாக கொண்டுஉள்ளேன்.


இது தொடர்பான விமர்சனங்கள், அவரவர் பார்வையில் தான் உள்ளது. இன்று, 'பன்னாட்டு
தாய்மொழி தினம்' என்பதாலும், கட்சி துவக்கத்தை இன்று வைத்துக் கொண்டேன்.கமல் முன்னிலையில், மீனவர் சங்க நிர்வாகி போஸ் பேசியதாவது:மீனவர்கள் குறைகளை தெரிவிக்க, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜை சந்தித்தோம். 'மடியேந்தி பிச்சை கேட்கிறேன். மீன் பிடிக்க அந்த பகுதிக்கு போகாதீங்க' என்கிறார் அவர்.

தேர்தலுக்கு முன், 'கடல் தாமரை' என்ற பெயரில், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, பல்வேறு குறைகளை எங்களிடம் கேட்டனர்.ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலில் தத்தளிக்கும் எங்களுக்கு உதவும் கட்டை போல் கமல் வந்துள்ளார்; ஆறுதலாக உள்ளது.
கமலின் இந்த முயற்சியை, துடுப்பாக பயன்படுத்திக் கொள்வோம். இங்கு வந்த மீனவர்கள் எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்தவர்கள் இல்லை; நாங்கள் சாதாரண மீனவர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


அப்போது, 'கமல் கட்சியில் சேருவீர்களா' என நிருபர்கள் கேட்டனர். இடைமறித்த கமல், ''அவர்கள் கட்சியில் சேர வரவில்லை. கட்சிக்கு ஆள் சேர்க்கவும் நான் வரவில்லை. அவர்களுடன் சேரவே இங்கு வந்துள்ளேன்,'' என்றார்.பின், ''எங்கள் கட்சியில், பொன்னாடை அணிவிக்கும் பழக்கம் இல்லை. நானே ஆடையாக மாறி விடுகிறேன்,'' என்ற கமல், மீனவ பிரதிநிதிகளை கட்டித் தழுவி நன்றி கூறினார்.பின், பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில், கமல் மரியாதை செலுத்தினார்.


சொந்த மண்ணில் கமல்



மதுரை வரும் வழியில், நடிகர் கமலுக்கு ராமநாத புரத்தில் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் அரண்மனையில், மன்னர் வாரிசு குமரன் சேதுபதி, மனைவி ராணி லட்சுமி வரவேற்றனர். மதிய உணவும் ஏற்பாடு செய்யப் பட்டது. உணவுடன் புரூட் சாலட், தயிர் பச்சடி, காலிபிளவர் ஆகியவற்றை கமல் விரும்பி சாப்பிட்டார்.பின், சொந்த ஊரான பரமக்குடிக்கு மதியம், 2:45 மணிக்கு கமல் வந்தார். நெரிசல் ஏற்பட்டதால் மேடைக்கு கமல் செல்ல முடியவில்லை. காரில் நின்றவாறே சில நிமிடங்கள் பேசி, புறப்பட்டார்.


'மாஜி' போலீஸ் அதிகாரி ஐக்கியம்



கமலின் புதிய அரசியல் கட்சியில், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மட்டும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில், எந்த பிரபலமும் இதுவரை இணையவில்லை. முதன் முதலாக, தமிழக போலீசில், ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்ற மவுரியா, 61, கமல் கட்சியில்

Advertisement

இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது.நமது நிருபரிடம் மவுரியா கூறியதாவது:


மக்கள் மாற்றம், முன்னேற்றம் என்பதை எதிர்பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கமல் கொடுப்பார் என, நம்புகி றேன். ஆகையால், கட்சியில் இணைந்து உள்ளேன். கட்சியில் பதவி வாங்க வேண்டும் என்பதற்காக நான் சேரவில்லை. எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றும் கமலிடம் சொல்லி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


60 ஆண்டு நண்பர் நெகிழ்ச்சி



* ஒவ்வொரு இடத்திற்கும் கமல் வரும் முன், அங்கு பாதுகாப்பு ஏற்பாடு, கூட்டம் குறித்து, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, கமலுக்கு தகவல் தெரிவித்த வண்ணம்
இருந்தார்.


* கமலில் அரசியல் பயணத்தில் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என தனித்தனியாக பிரித்து, 'நம்மவர்' என்ற அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.


* ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த போதும், சொந்த ஊரான பரமக்குடி மற்றும் மானாமதுரையிலும், மக்கள் கூட்டத்தை பார்த்து, கமல் மிரண்டு போனார். இதனால், மேடை ஏறுவதை தவிர்த்து, காரில் நின்றவாறு பேசிவிட்டு புறப்பட்டார்.


* கமலுடன் வந்த கார் அணிவகுப்பில், அவரால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டும், 12 கார்களில் அனுமதிக்கப்பட்டனர். கமல் காருக்கு முன், பின், போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.


* ராமநாதபுரம் மேடையில், கமலின் நண்பரான நாடக நடிகர் அண்ணாதுரை பேசுகையில், ''இருவரும், 60 ஆண்டு கால நண்பர்கள். சகலகலா வல்லவரான கமலை எல்லோருக் கும் பிடிக்கும். ஆனால், அவருக்கு பிடித்தவர் நான். நலிந்த நிலையில் இருந்தபோது, எனக்கு கை கொடுத்து துாக்கி விட்டவர்,'' என நெகிழ்ந்தார்.


* பரமக்குடியில் கூட்டம் அதிகரித்த நிலையில், 'கமல் மேடைக்கு வர போலீஸ் ஏற்பாடு
செய்ய வேண்டும்' என, மைக்கில் நிர்வாகிகள் அறிவித்த போதும், போலீசார் கண்டுகொள்ளவில்லை.

டுவிட்டரில் கருத்து



கலாம் வீட்டில் சந்திப்பை முடித்த கமல், அவரது டுவிட்டரில் உடனடியாக, 'ரியாக்ஷன்' தெரிவித்து பதிவிட்டார். அதில், 'பிரமிப்பூட்டும் எளிமையை கண்டேன். கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும்... அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தை தொடங்கியதை பெரும் பேறாக நினைக்கிறேன்' என தெரிவித்தார்.


அதேபோல், அப்துல் கலாம் கொள்கைகளை பரப்பி வரும் நடிகர் விவேக், டுவிட்டரில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு உடனடியாக, 'என்னை வாழ்த்திய தம்பி விவேக்கிற்கு நன்றி' என கமல் பதிவிட்டார்.


'நம்மவர்' கமல்



அரசியல் பயணத்தை துவக்கிய கமலை வரவேற்று, ராமேஸ்வரத்தில் ரசிகர்கள் விளம்பரம் செய்திருந்தனர். இதில், 'நம்மவர்' என்ற அவரது வெற்றி படத்தின் பெயரையே, அடைமொழியாக குறிப்பிட்டிருந்தனர்.

- நமது நிருபர் குழு -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-201810:44:22 IST Report Abuse

Malick Rajaபேமானி என்று சொல்வார்கள் அதன் விளக்கத்தை கமலின் மூலம் அறியலாம்

Rate this:
vns - Delhi,இந்தியா
22-பிப்-201808:16:30 IST Report Abuse

vnsகுல்லா போட்டவரிடம் ஆசிவாங்கி நமக்கு குல்லா போடப்போகிறார்

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
22-பிப்-201805:45:28 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)க(கா)மல் ஒரு சிறந்த நடிகர். திரைப் படம் போலவே இங்கயும் நல்ல கல்லா கட்டுவார்.

Rate this:
சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்
22-பிப்-201805:18:42 IST Report Abuse

சுரேஷ் குமார்.///இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்க வில்லை' என சிலர் கூறுகின்றனர். இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை என்பதை, நான் வழக்கமாக கொண்டுஉள்ளேன். /// சிவாஜி , மனோரமா போன்றோரின் இறுதி ஊர்வலத்தில் கலந்த கொண்ட செய்தியும் போட்டோவும் பேஸ் புக், ட்விட்டர் ல் பதிந்து இருக்கிறார்கள்.. கமல் ஏன் ஆரம்பத்திலேயே முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பொய் பேச வேண்டும் ?

Rate this:
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
22-பிப்-201809:07:30 IST Report Abuse

raguraman venkatசார், நீங்க ரொம்ப கேள்வி கேட்காதீங்க - நம்மவர் டென்ஷனாகி "என் இறுதி ஊர்வலத்திலேயே நான் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையுடைவன்னு" சொல்லிடப்போறாரு. டேக் இட் ஈஸி. அரசியல்வாதி ஆயிட்டாரு. இனிமே பொய் புரட்டெல்லாம் சகஜமாய் வரும்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement