புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த, பிரபல நகை தொழிலதிபர், நிரவ் மோடியின், மும்பை வீடு உட்பட, 35 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், ஐந்தாம் நாளாக நேற்று, அதிரடி சோதனை நடத்தினர்.
உலகின் பல்வேறு நாடுகளில், விலை உயர்ந்த, தங்க, வைர நகை ஷோரூம்களை, நிரவ் மோடி நடத்தி வருகிறார்.
வைர நகைகள்
இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், இரு அதிகாரிகள் உதவியுடன், 11,400 கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது.நிரவ் மோடியும், அவரது மாமாவும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன அதிபருமான, மெஹல் சோக்சியும்,
குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நிரவ் மோடி, சோக்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில்,
நான்கு நாட்களாக, சோதனை நடத்தி வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், ஐந்தாவது
நாளாக, நேற்றும் சோதனையைதொடர்ந்தனர்.மும்பையில், வொர்லி பகுதியில் உள்ள, நிரவ் மோடியின் சொகுசு பங்களாவில், நேற்று சோதனை நடந்தது. தவிர, மும்பை, புனே, அவுரங்காபாத், தானே, கோல்கட்டா, டில்லி, லக்னோ, பெங்களூரு, சூரத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள, 34 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை நடந்தது.இந்த சோதனைகளில், 5,695 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை, அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
சிறப்பு விசாரணை
மோசடி நடந்த, மும்பையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, நேற்று,'சீல்' வைக்கப்பட்டு மாலையில் அகற்றப்பட்டது.இது குறித்து, மூத்த அதிகாரி
ஒருவர் கூறுகையில், 'நிரவ் மோடி, சோக்சி ஆகியோரின் வீடு, அலுவலகங்கள்,
ஷோரூம்களில் நடந்த சோதனைகளில், கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டு டிஸ்க்குகள்
மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணிகள் நடக்கின்றன' என்றார்.இதற்கிடையே, நிரவ் மோடி, சோக்சி தொடர்பான, சிறப்பு விசாரணை குழு நடத்தி வரும் விசாரணைகளை ஆய்வு செய்வதற்காக, அமலாக்கத் துறை இயக்குனர், கர்நால் சிங், விமானம் மூலம், நேற்று மும்பை சென்றார். மேலும், நிரவ், சோக்சிக்கு சொந்தமான, 20க்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை முடக்க, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.நிரவ் மோடி, சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், தலா, முதல் தகவல் அறிக்கைகள் இரண்டை பதிவு செய்துள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து