புதுடில்லி,: முக்கிய தலைவர்கள் இந்தியா வருகை தரும் போது, அவர்களை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்பு அளிக்கும், பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமரை, அவ்வாறு வரவேற்காததற்கு, அந்நாட்டு ஊடகங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
வட அமெரிக்க நாடான, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ருடேவ், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன், அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார்.
கண்டனம்
நம் நாட்டுக்கு வருகை தரும், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்களை, விதிகளை மீறி, விமான நிலையத்துக்கு சென்று, அவர்களை கட்டியணைத்து வரவேற்பு அளிப்பது, பிரதமர் மோடியின் பாணி.இஸ்ரேல் பிரதமர்,
பெஞ்சமின் நேதன்யாஹு, சமீபத்தில் இந்தியா வந்த போதும், 2015ல், அமெரிக்க
அதிபராக இருந்த, ஒபாமா, இந்தியா வந்த போதும், அவர்களை விமான நிலையத்துக்கு
சென்று, கட்டித் தழுவி வரவேற்பு அளித்தார் மோடி.
தற்போது இந்தியா வந்துள்ள, கனடா பிரதமர், ஜஸ்டினை, பிரதமர் மோடி, விமானநிலையத்துக்கு சென்று வரவேற்கவில்லை. பிரதமருக்கு பதில், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும் செல்லவில்லை. விவசாயத் துறை இணை அமைச்சர், கஜேந்திர சிங், கனடா பிரதமரை வரவேற்கச் சென்றார்.இந்தியா வந்துள்ள கனடா பிரதமருக்கு, 'டுவிட்டரில்' கூட, பிரதமர் மோடி, வரவேற்பு செய்தி வெளியிடவில்லை. இதற்கு, கனடா நாட்டு பத்திரிகைகளும், ஊடகங்களும், கண்டனம் தெரிவித்து செய்திகளை வெளியிட்டு உள்ளன.
மறுப்பு
கனடாவில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு, அந்நாட்டு அரசு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கனடா பிரதமர், ஜஸ்டின்அமைச்சரவையில், இரு சீக்கியர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். அவர்கள் இருவரும், காலிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர்.இது தொடர்பாக, கனடா பிரதமருக்கு, பஞ்சாப்
முதல்வர், அமரீந்தர் சிங், 2017ல், வெளிப்படையாக கடிதம் எழுதி இருந்தார். பஞ்சாபில், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு, கனடா பிரதமர், நாளை செல்ல திட்டமிட்டு உள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க, அமரீந்தர் சிங் விருப்பம் தெரிவித்து இருந்தார். அதற்கு, கனடா பிரதமர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த காரணங்களால், கனடா பிரதமருக்கு, வழக்கமான உற்சாக வரவேற்பு அளிப்பதை, பிரதமர் மோடி தவிர்த்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம், உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள பொற்கோவிலுக்கு, கனடா பிரதமர் சென்ற போது, அவரை சந்திப்பதை, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் தவிர்த்து விட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து