புதுடில்லி: பிரபல நகை தொழிலதிபர், நிரவ் மோடி, அவரது உறவினர், மெஹுல் சோக்சியின் மெகா மோசடிகள் குறித்து விசாரித்து வரும் புலனாய்வு அமைப்புகள், 200 போலி நிறுவனங்கள் மூலம், அவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடிசெய்துள்ளதை கண்டுபிடித்துள்ளன. அந்த நிறுவனங்களின் பெயரில் உள்ள, 'பினாமி' சொத்துகள் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன.
பிரபல நகை தொழிலதிபர், நிரவ் மோடி. இவர் பெயரில், உலகின் பல்வேறு நாடுகளில், செயல்பட்டு வரும் நகை கடைகளில், விலை யுயர்ந்த நகைகள் விற்கப்பட்டு வருகின்றன. ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள், நிரவ் மோடியின் கடைகளில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், வங்கி அதிகாரிகளின் துணையுடன், கூட்டுச் சதி செய்து, 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிரவ் மோடிக்கு எதிராக புகார் எழுந்தது. ஆனால், கடந்த மாதமே, அவர், அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நிரவ் மோடி, சோக்சியின் நிறுவனங்களுக்கு எதிராக, நான்காம் நாளாக, அமலாக்கத்துறை நேற்றும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டது.நிரவ் மோடி, சோக்சி நடத்தி வரும், நகை கடைகள், தொழிற்சாலைகள் உட்பட, 45 இடங்களில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
இவர்களுக்கு சொந்தமான, 20க்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்க, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நிரவ், சோக்சி ஆகியோர், வங்கி களில் மோசடி செய்து பெற்ற பணத்தை, வேறு வழிகளில் திருப்பி விடுவதற்கு, 200க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை தொடர்பாகவும், மோசடிகளில் தொடர்புடைய பினாமி சொத்துகள் குறித்தும்,
அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கென, நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில்,
நிரவ் மோடியின் மோசடி லீலைகள் குறித்து, புலனாய்வு துறை வட்டாரங்கள் கூறிய
தாவது:நிரவ் மோடி, அவர் மாமாவும், கீதாஞ்சலி நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்களுக்கு, இந்திய வங்கிகள், 2017, மார்ச் வரை, கடனாகவும், கடன் உத்தரவாதமாகவும், 17 ஆயிரத்து, 632 கோடி ரூபாய் வழங்கி உள்ளன. கடந்த ஓர் ஆண்டில், இந்த தொகை, 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்த தகவல்களுடன், வருமான வரித் துறை, துறை சார் குறிப்பு ஒன்றை தயாரித்துள்ளது.
நிரவ் மோடி, மெஹுல் சோக்சி தொடர்புடைய பல நிறுவனங்களில், பெரும்பான்மை பங்குதாரர்களாக, வசதியற்ற சாதாரண நபர்களே இடம் பெற்றுள்ளனர். இவர்களை பற்றிய விபரங்கள் கண்டறியப்பட வில்லை.நிரவ் மோடியின் நிறுவனங்கள், ஸ்டெல்லார் டைமண்ட், சோலார் எக்ஸ்போர்ட்ஸ், டைமண்ட் ஆர் அஸ் ஆகியவற்றின் பங்கு தாரர்களின் மொத்த முதலீடு, 400 கோடி ரூபாய் மட்டுமே.ஆனால், இந்த நிறுவனங்களுக்கு வங்கி கள், 3,992 கோடி ரூபாயை, கடனாக அளித்துள்ளன.
இந்த நிறுவனங்களின் மொத்த விற்று முதல் தொகையை விட, அவற்றின் வாடிக்கையாளர் களுக்கு அளிக்கப்பட்ட பில்களின் தொகை மிக அதிகம்.இதன் மூலம், தொடர்புடைய நபர்களுக்கு, அதிக தொகையில் பில்கள்அளிக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.இவ்வாறு புலனாய்வு துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, நிரவ் மோடியும், சோக்சியும், இதுவரை, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.அவர்கள்இருவரும், கடந்த ஜனவரி மாத துவக்கத்தில், வெளிநாடுகளுக்கு தப்பியோடி
விட்டதாகவும், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும், சி.பி.ஐ.,
தெரிவித்துள்ளது.
தப்பிய தொழில் அதிபர் சிக்கிய வங்கிகள்
வருமான வரித்துறையின் துறை சார்ந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிரவ் மோடி, மெஹுல் சோக்சிக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு, பஞ்சாப்
நேஷனல் வங்கியின், மும்பை
கிளையில் பணியாற்றும், இரு இளநிலை அதிகாரிகள், உத்தரவாத கடிதங்களை அளித்துள்ளனர். இந்த கடிதங்கள் மூலம், வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில், நிரவ் மோடியும், சோக்சியும் பணம் பெற்றுள்ளனர். இந்த மோசடிகள், பல ஆண்டுகளாக நடந்து வந்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.
மும்பை வங்கி கிளை அளித்த உத்தரவாத கடிதங்கள் பற்றிய குறிப்புகள், வங்கியின் மென்பொருள் தொழில்நுட்ப பதிவுகளில் இடம்பெறவில்லை. மாறாக, 'ஸ்விப்ட்' எனப்படும், வங்கிகள் இடையிலான தகவல் பரிமாற்ற தொழில் நுட்ப முறையில், உத்தரவாத கடித தகவல்கள் பரிமாறப்பட்டு உள்ளன. இதனால், மோசடி பரிமாற்றங்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் போனது.
சோக்சியின், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், 32 வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளன. நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் முதல், சீனாவின், பீஜிங் வரை நடத்தி வரும், பிரபல நகைக் கடைகளுக்கு, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை, பெருந்தொகையை கடனாக வழங்கி உள்ளன.இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிரவ் மோடி தொடர்புடைய நிறுவனங்களுக்கு, 2,000 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாக, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. தனியார் துறையை சேர்ந்த, ஆக்சிஸ் வங்கி, நிரவ் மோடியுடனான கணக்குகள், ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து