புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிதி முறை அழிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதிமுறை அழிக்கப்படுகின்றன. பிரதமர் மக்களின் பணத்தை எடுத்து வங்கி துறைக்குள் வைத்திருக்கிறார். தற்போது அவரது நண்பர்கள் வங்கி துறையில் இருந்து திருடி வருகின்றனர்.
திசை திருப்ப முயற்சி
பணமதிப்பிழப்பிற்கு பின்னர் மிக பெரிய மோசடி தற்போது நடைபெற்றுள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்த நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார். இத்தகைய மோசடி உயர் மட்ட பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டிருக்க முடியாது. இது குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க மறுத்து வருகிறார். இவ்விசயத்தில் பாஜ திசை திருப்ப முயற்சிக்கிறது.
பிரதமர் மோடி 15 மணி நேரம் பரீட்சை குறித்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறார். ஆனால் மோசடி குறித்து யார் பொறுப்பு என்று அவர் கூற வில்லை. இவ்விவகாரத்தில் பிரதமர், மத்திய நிதி அமைச்சர் உட்பட யாரும் எதுவும் கூற வில்லை என ராகுல் கூறினார்.