சத்தியமங்கலம்: ஆலத்துகோம்பை பகுதியில், அமைச்சர்கள் கலந்து கொண்ட பூமி பூஜையில், பட்டாசு வெடித்ததில், வீட்டின் கூரை எரிந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆலத்துகோம்பை பகுதியில், காலனியில் இருந்து அனுப்பர்பாளையம் வரை, இரண்டு கி.மீ., தூரம், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் கலந்து கொண்டனர். இவர்கள் வாகனத்தில் வந்து இறங்கியவுடன், தொண்டர்கள் வைத்த பட்டாசில் இருந்து வெளியேறிய நெருப்பு, அருகில் இருந்த சின்னான், 63, என்பவரது வீட்டின் கூரை மீது பட்டு, கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. எம்.எல்.ஏ.,-அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் சின்னானுக்கு, அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி விட்டு சென்றார். இதனால் அப்பகுதியில், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.