சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., விகிதத்தை மீறும் வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட கொள்ளை லாப தடுப்புக் குழு, தமிழகத்தில் விரைவில் பணியைத் துவக்க உள்ளது. இதனால் கொள்ளை லாபம் பார்க்கும் வர்த்தகர்கள் கலக்கம் அடையத் துவங்கி உள்ளனர்.
நாடு முழுவதும், 2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தது. அப்போது, சேவைகள் மற்றும் பொருட்களுக்கு, 5 சதவீதம் முதல், 28 சதவீதம் வரை, நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட்டன. தேவைக்கேற்ப, வரி விகிதங்களை மாற்றுவதற்கு, அனைத்து மாநிலங்களின் அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மாதந்தோறும் நடைபெறுகிறது.
நடவடிக்கை
இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவு களின் படி, ஏராளமான பொருட்களுக்கு, வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதன் பலனை, பொதுமக்களுக்கு தரும் வகை யில், வர்த்தகர்களும், வணிக நிறுவனங்களும்
செயல்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை தடுக்க, கொள்ளை லாப தடுப்புக் குழுவை, மாநிலந்தோறும் அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி, தமிழகத்திலும், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது; விரைவில் செயல் பாட்டுக்கு வருகிறது. அப்போது, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், தங்கள் குறைகள் மற்றும் புகார்களை, நேரிலோ அல்லது இதர வழிகளிலோ தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக, தமிழக வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கூட்டத்தில், வரி குறைப்பு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு களை, பல நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர் கள் சரிவர அமல்படுத்துவதில்லை. வரி குறைப்புக்கு ஏற்ப, விலையை குறைக்காமல், அதே விலைக்கு விற்கின்றனர். வரி விகிதம் குறைக்கப் பட்டது தெரியாமல், பழைய விலையையே மக்களும் செலுத்துகின்றனர். இதனால், அந்த வர்த்தகர் களுக்கு, கொள்ளை லாபம் கிடைக்கிறது.
உதாரணத்திற்கு, ஓட்டல்களில் உணவுப் பண்டங் களுக்கு, 18 சதவீதம் வரி விதித்த போது, 100 ரூபாய் விலையுள்ள, ஒரு பண்டத்தை, 118 ரூபாய்க்கு விற்றனர். ஆனால், 5 சதவீதமாக, வரி குறைக்கப் பட்ட போது, அதை, 105 ரூபாய்க்கு விற்பதற்கு பதிலாக, தொடர்ந்து, பழைய விலைக்கு விற்கின்றனர்.
முழு வீச்சு
இதேபோல, பல துறைகளில் மோசடி நடக்கிறது. இது பற்றிய புகார்கள் வந்தால், மத்திய, ஜி.எஸ்.டி., அதிகாரிகளும், மாநில வணிக வரித்துறை அதிகாரி களும்நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும், வர்த்தகர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை
தடுப்பதற்காக, ஜி.எஸ்.டி., விதிமுறைகளின் படி, கொள்ளை லாப தடுப்புக் குழுவை அமைக்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதில், மத்திய - மாநில அதிகாரிகள் இடம் பெறுவர் என்றும் தெரிவித்தது. அதன்படி, தமிழகத்தில் கொள்ளை லாப தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் உறுப்பினர்களாக, தற்போதைக்கு, மத்திய, ஜி.எஸ்.டி., உதவி ஆணையர், ஸ்ரீதர் ரெட்டி மற்றும் தமிழ்நாடு வணிக வரித்துறை இணை ஆணையர், மரியம் பல்லவி பல்தேவ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இருவரும், தடுப்புக் குழு எவ்வாறு செயல் படுவது என்பது தொடர்பாக, ஏற்கனவே பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர்.எனினும், குழுவினர் தீவிரமாகச் செயல்படுவதில், சுணக்கம் ஏற்பட்டு இருந்தது. தற்போது, அவர்கள் முழுவீச்சில் இயங்கத் துவங்கி உள்ளனர். இந்தக் குழுவுக்கு அலுவலகம் அமைக்க, சென்னையில் இடம் தேடப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply