பதிவு செய்த நாள்
17 பிப்2018
00:15

வாஷிங்டன் : ‘நிதி பற்றாக்குறையை குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், மத்திய அரசின், 2018 – 19ம் நிதியாண்டு பட்ஜெட் அமைந்துள்ளது’ என, பன்னாட்டு நிதியம் பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர், கெரி ரைஸ் கூறியதாவது: மத்திய அரசின், 2018 – 19ம் நிதியாண்டு பட்ஜெட் இலக்குகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ள, நிதி பற்றாக்குறை இலக்கும், வரவேற்கத்தக்கது.
பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் முயற்சியில், துவக்க கட்டத்தில், இந்தியா உள்ளது. இதற்கு ஆதரவாகவும், நிதியாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என, பன்னாட்டு நிதியம், ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில், வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை இலக்கு, 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
பரிவர்த்தனைகளின் மதிப்பை விட, வரி வருவாய் அதிகரிக்கும் என்பதை பட்ஜெட் உணர்த்துகிறது. அவ்வாறு நடைபெற்றால், மக்களின் நுகர்விலும், வருமானத்திலும் மாற்றம் ஏதுமின்றி, அதிகளவில் வரி வருவாயை, அரசு ஈட்ட முடியும். அதே சமயம், 2017ல் அறிமுகமான, ஜி.எஸ்.டி.,யில், நடைமுறை சிக்கல்கள் இன்னும் நீடித்து வருவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால், மத்திய அரசின் வரி வசூல், பட்ஜெட் இலக்கை விட குறையவும் வாய்ப்பு உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதில், மத்திய அரசின் நிலை முழுவதுமாக தெரிந்த பின் தான், கருத்து கூற முடியும்.விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உற்பத்திச் செலவை விட, ஒன்றரை மடங்கு அதிகமாக, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தேசிய காப்பீட்டு திட்டத்தின் கீழ், 50 கோடி பேருக்கு, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, மருத்துவக் காப்பீட்டு வசதி அளிக்கப்படும் எனவும், பட்ஜெட் தெரிவிக்கிறது. இத்தகைய, புதிய கொள்கை திட்டங்களால், வருவாய் பற்றாக்குறையோ அல்லது அதிக நிதி ஒதுக்கீடோ தேவைப்படலாம்.
இதன் காரணமாக, மத்திய அரசின் வழக்கமான திட்டச் செலவினங்கள் குறையும். இந்த பட்ஜெட், கிராமப்புற மேம்பாடு, சமூக நலன் ஆகியவற்றை வலியுறுத்தினாலும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிக மாற்றம் இல்லை.
மத்திய அரசு, நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கை, 3.2 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. இது தற்போது, 3.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பாண்டு, 7.4 சதவீதமாகவும், 2019ல், 7.8 சதவீதமாகவும் இருக்கும்.
-பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
|
|