ஈரோடு: வருவாய் துறை கிராம உதவியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தை, ஈரோடு தாலுகா அலுவலகத்தில், நேற்று மாலை துவக்கினர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் போல், கடைசி மாத ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், நேற்று மாலை, 6:30 மணியளவில், ஈரோடு தாலுகா அலுவலகத்தில், காத்திருக்கும் போராட்டத்தை துவக்கினர். இன்று மாலை, 6:00 மணி வரை போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு தாலுகாவில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட, 40 பேரும், மாவட்டத்தில், 10 தாலுகாக்களில், 450 பேரும் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தற்செயல் விடுப்பு எடுத்துள்ளோம். மூன்று கட்ட போராட்டத்தில் இது முதற்கட்ட போராட்டம். மார்ச், 9ல் சென்னையில் பெருந்திரள் முறையீடு, ஏப்., 3 முதல், 6 வரை, தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல் பெருந்துறை, கொடுமுடி தாலுகா அலுவலகத்திலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.