சென்னை:காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம், நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து, தமிழக அரசியல்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம்.
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:
புவியியல் மற்றும் சரித்திர ரீதியாக, தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை, உச்ச நீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்க, அ.தி.மு.க., அரசு தவறி விட்டது. இறுதி விசாரணையின் போது, கருகிக் கிடக்கும் பயிர்களையும், காய்ந்து கிடக்கும் வயல்களையும், நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
தி.மு.க., முதன்மைச் செயலர், துரைமுருகன்:
தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட அளவைவிட, 15 டி.எம்.சி., வரை குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசின் அலட்சியம் காரணமாகவே, இந்தத் தீர்ப்பு வந்து உள்ளது. இந்த வழக்கில், முதலிலிருந்து வாதாடியவர்களுக்குப் பதில், புதியவர்களை வைத்து வாதாடியதால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர்:
'காவிரி நதி, எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்திற்கு, நடுவர் மன்ற அளவை விட குறைந்த அளவை, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது, வருத்தம் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியும், மன வருத்தமும் சேர்ந்து தருகிறது.
இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன்:
'காவிரியை யாரும் உரிமை
கொண்டாட முடியாது' என, கூறியுள்ளதும், 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள் ளதும் வரவேற்கத் தக்கது. ஆனால், தமிழகத்திற் கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி, பொது மக்களும் பாதிக்கப்படுவர்.
நடிகர் ரஜினி:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தை, மேலும் பாதிப்பதாக உள்ளதால், மிகுந்தஏமாற்றமளிக்கிறது. மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:
தீர்ப்பு, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தற்போதைய தீர்ப்பின்படி, தண்ணீரை முழுமையாக, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக உரிமைகள் பாதிக்கப்படுவதற்கும், விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கும், தி.மு.க., - அ.தி.மு.க.,வே காரணம்.
நடிகர் கமல்:
காவிரியில், நீர் குறைக்கப்பட்டது, ஏமாற்றம் அளிக்கிறது. 'காவிரியை, தனிப்பட்ட ஒரு மாநிலம், உரிமை கொண்டாட முடியாது' என்பது வரவேற்கத்தக்கது. ஓட்டு வேட்டையில், காவிரி சர்ச்சையை துாண்டிவிட்டு, தேசியம் மறந்து பேசுகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது, சற்றே ஆறுதலாக இருக்கிறது. போராடுவது உதவாது; தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதே சிறந்தது.
தமிழக, எம்.பி.,க்கள் அதிருப்தி
'காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மிகவும் அநீதியானது; நிச்சயம், தமிழக விவசாயிகளுக்கு பின்னடைவைஏற்படுத்தும்' என, டில்லியில், தமிழக, எம்.பி.,க்கள் கருத்து தெரிவித்தனர்.
இது
குறித்து நிருபர்களிடம், அ.தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர்,
நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ''உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு,
தமிழகத்துக்கு மிகவும் பின்னடைவாக
உள்ளது. இதை, யாரும் மறுக்கவோ, குறைத்து மதிப்பிடவோ இயலாது. தீர்ப்புக்கு பின், மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.''சட்டத்தை மதிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்; தீர்ப்பை அளித்தது உச்ச நீதிமன்றம் என்பதால், வேறு வழியின்றி, இதை ஏற்கத் தான் வேண்டும்,'' என்றார்.
அ.தி.மு.க., ராஜ்யசபா மூத்த, எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது:
தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. நடுவர் மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை, ஓராண்டு கூட கர்நாடகா மதித்தது இல்லை. இப்போது மட்டும் மதிப்பரா என, தெரியவில்லை.தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு, கர்நாடகாவில் அரசியல் செல்வாக்கு இருப்பதாலேயே இவ்வளவும் நடக்கிறது.
'ஒரே தேசம்; ஒரே தேர்தல்' எனக் கூறும் பிரதமர், 'ஒரே நாடு; ஒரே தண்ணீர்' எனக் கூற முன்வருவாரா... நதிநீர் இணைப்பு குறித்து, மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை தந்து நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., - எம்.பி., சிவா கூறுகையில், ''காவிரி குறித்த ஒட்டு மொத்த விவகாரங்கள் மீதும், சட்ட நுணுக்கங்களை அறிந்த ஒரு நிபுணரை, தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை, உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைக்கால தீர்ப்பு தந்த அளவை விட, இறுதி தீர்ப்பில், தமிழகத்தின் தண்ணீர் அளவு குறைந்தது.
''தற்போது, அதையும் விட தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. உறுதியான வகையில், நியாயமான வாதங்களை, உரிய அழுத்தத் துடன், தமிழகம் தரப்பில் வைக்கப்படவில்லை என, தோன்றுகிறது,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து