காத்மாண்டு: நேபாளப் பிரதமராக, இடதுசாரி கூட்டணியின் தலைவர், கே.பி.சர்மா ஒலி, நேற்று பதவியேற்றார். அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் மற்றும் மேல்சபைக்கான தேர்தல், சமீபத்தில், இரண்டு கட்டங்களாக நடந்தது; இதில், கே.பி.ஒலி, 65; தலைமையிலான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், முன்னாள் பிரதமர் பிரசண்டா தலைமையிலான, மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் கூட்டணி அமைத்தன. தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தமுள்ள, 275 தொகுதிகளில், இந்தக் கூட்டணி, 174 இடங்களில் வெற்றி பெற்றது. மேல்சபையில், இந்த கூட்டணி, 39 இடங்களைப் பெற்றது. இதையடுத்து, தற்போது பிரதமராக பதவி வகித்து வரும், நேபாள காங்., கட்சியை சேர்ந்த ஷேர் பகதுார் தெபா, தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான சர்மா ஒலி, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின், 41வது பிரதமராக, கே.பி.சர்மா ஒலி நியமிக்கப்படுவதாக, அதிபர் பித்யா தேவி பண்டாரி நேற்று அறிவித்தார். அவரது பதவியேற்பு விழா, காத்மாண்டுவில் நேற்று நடந்தது. சீன ஆதரவாளராக அறியப்படும் ஒலி, 2015 - 2016 வரை பிரதமர் பதவி வகித்துள்ளார்.