ஆத்தூர்: தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து, 2.90 லட்சம் ரூபாய் திருடுபோனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், மஞ்சினியைச் சேர்ந்தவர் ராஜா, 31. இவர், புதுப்பேட்டை, உழவர் சந்தை பகுதியொட்டி, 'எஸ்.எஸ்., பைனான்ஸ்' நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, அலுவலகத்தை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 6:30 மணிக்கு, அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து, அப்பகுதியினர், ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, இரு டேபிள் லாக்கரை(பாதுகாப்பு பெட்டகம்) உடைத்து, 2.90 லட்சம் ரூபாய், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் அடமான சொத்து பத்திரம் ஆகியவை திருபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அவர் அளித்த புகார்படி, ஆத்தூர் டி.எஸ்.பி., பொன்கார்த்திக்குமார் தலைமையில் போலீசார், கைரேகை நிபுணர் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அருகிலுள்ள மதுர ஓட்டல், மொபைல் கடை, மற்றொரு நிதி நிறுவன அலுவலக பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால், பணம் இல்லாததால், மர்ம நபர்கள், உடைத்த பூட்டுகளை சாலையில் வீசிச் சென்றுள்ளனர். ஆத்தூர் போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.