சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், முன்பதிவு அடிப்படையில், கோடைகால சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான பட்டியல் தயாராகிறது.
நாடு
முழுதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், கோடைகால விடுமுறை மற்றும் பண்டிகை
காலங்களில், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில்கள்
இயக்கப்படும். அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில், வழக்கமான
வழித்தடங்களில், கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அது, நடப்பாண்டு
முன்பதிவு அடிப்படையில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே
அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு, பெரும்பாலான பயணிகள்,
பிரசித்திபெற்ற கோவில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு, ரயில்வே
ஸ்டேஷன்களில், முன்பதிவு செய்வர். அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில்,
நடப்பாண்டு, எந்தெந்த பகுதிகளுக்கு, முன்பதிவு அதிகம் செய்யப்படுகிறது
என்பதை கருத்தில்கொண்டு, அதன்படி, புதிய ரயில்கள் மற்றும் கூடுதல்
பெட்டிகளை இணைப்பது குறித்த பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது. இதற்கு,
வழக்கமாக இயக்கப்படும், பல சிறப்பு ரயில்களில், பெரும்பாலும் கூட்டமின்றி
இருப்பதே காரணம். தற்போது கோவை, எண்ணாகுளம், திருவனந்தபுரம், பெங்களூரு,
கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களுக்கு, பயணிகள் முன்பதிவில் ஆர்வம்
காட்டிவருகின்றனர். இதுகுறித்த பட்டியல், ரயில்வே நிர்வாகத்துக்கு
அனுப்பப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.