புதுடில்லி: காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. வழக்கில் 2017 செப்.,20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., நிலத்தடி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. தமிழகத்தில் 20 சதவீத நிலத்தடி நீர் உள்ளது. இதனை பயன்படுத்த வேண்டும். குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பெங்களூருவுக்கு கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கிறோம். நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகம் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.