வாஷிங்டன் : அமெரிக்காவில், இந்திய வம்சாவளி மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளியில், முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 17 பேர் பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவனை, போலீசார் கைது செய்துள்ளனர். அவன் பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள, மார்ஜரி ஸ்டோன்மென் உயர்நிலைப் பள்ளியில், அமெரிக்க மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படித்த, நிகோலஸ் குரூஸ், 19, ஒழுங்கீன நடவடிக்கையால், கடந்த ஆண்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான்.
நேற்று முன்தினம், பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த குரூஸ், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த பலர், பள்ளியை விட்டு வேகமாக வெளியேறினர்.
அப்போது, அவர்களை நோக்கியும், குரூஸ் தாக்குதல் நடத்தினான். பள்ளி வகுப்பறை, வாயிற்பகுதி, சாலை என பல இடங்களிலும், குரூசின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில், மாணவர்கள் உட்பட, 17 பேர் பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு, அப்பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார், விரைந்து வந்து, குரூசை கைது செய்தனர்.
அவனிடம் இருந்த, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கடும் மன உளைச்சலுடனும், கோபத்துடனும் காணப்பட்ட குரூசிடம், தாக்குதலுக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குத லுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகின் வேறெந்த வளர்ந்த நாடுகளிலும் இல்லாத வகையில், அமெரிக்காவில், துப்பாக்கி கலாசாரம் தலை துாக்கியுள்ளதாக, அந்நாட்டு எம்.பி.,க்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 'இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும்' என, புளோரிடா மாகாண கவர்னர் உறுதி அளித்துள்ளார்.
குரூஸ் குறித்து, அவனின் முன்னாள் ஆசிரியர்கள் கூறியதாவது: எங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன், ஏற்கனவே, இரண்டு பள்ளிகள் அவனை வெளியேற்றியுள்ளன. படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படும் குரூஸ், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தான். 'ஜூனியர் ரிசர்வ் ஆபீசர் டிரைனிங் கார்ப்ஸ்' எனப்படும் மாணவர் படை அமைப்பில் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த அங்கீகாரம் பெற்றான். படிப்பிலும் சிறந்து விளங்கிய அவன், எப்போதும் தனிமையில் இருப்பதையே விரும்புவான். வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இளம் வயதில் நடந்த, விரும்பத்தகாத சம்பவங்களால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குரூஸ், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, குரூசிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறியதாவது: இளம் வயதிலேயே, பெற்றோரை இழந்த குரூஸ், கடுமையான சூழலில் வளர்ந்து வந்துள்ளான். வாலிப பருவம் எய்திய நிலையில், தன் விருப்பங்கள் நிறைவேறாத காரணத்தால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான். அவனின், சமூக வலைதள பக்கங்கள், இ - மெயில்கள், இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவற்றை ஆராய்ந்தில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அனைத்திலும், துப்பாக்கியுடனான படங்களை பதிவு செய்து, அதை பகிர்ந்துள்ளான். 'நான் பலரை கொல்ல வேண்டும்; துப்பாக்கியால் சுட வேண்டும்' என்ற வாசகங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. சிறு வயதில் ஏற்பட்ட குடும்ப, தனிப்பட்ட பிரச்னைகளால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய குரூஸ், ஒரு கட்டத்தில், வன்முறையை கையில் எடுத்துள்ளான். அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து