சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில், நேற்று அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, கார்த்தியின் ஆடிட்டர், பாஸ்கரராமனை, அமலாக்கத்துறை கைது செய்தது.
மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற நிறுவனம், 2007ல், வெளிநாட்டு முதலீடாக, 307 கோடி ரூபாயை பெற முயற்சி செய்தது. அப்போது, மத்திய அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் மகன், கார்த்தி, அந்த நிறுவனத்திற்கு, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்றுத் தந்தார்.
அதற்காக, அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை
மேலும், சென்னை உட்பட, பல்வேறு இடங்களில் உள்ள, கார்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங் களில், அதிரடி சோதனை நடத்தி, முக்கிய
ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. இந்த விவகாரத்தில், கார்த்தி, சட்ட விரோத பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து, அமலாக்கத் துறையும்
விசாரணையை துவக்கியது. இதற்கிடையில், விசாரணைக்கு ஆஜராகாமல், கார்த்தி
இழுத்தடித்து வந்ததால், அவரை கண்காணிக்கப்படும் நபராக, சி.பி.ஐ.,
அறிவித்து, அவருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' வெளியிட்டது.
அவர்வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், கார்த்தி ஆஜரானார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.
வீடுகளில் சோதனை
அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, சென்னையில் உள்ள, கார்த்தி, அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி, ஆய்வு செய்யும் பணியும் தொடர்ந்து நடக்கிறது. இந்த வழக்கில், திடீர் திருப்பமாக, நேற்று கார்த்தியின், 'ஆடிட்டர்' பாஸ்கரராமன், டில்லியில் கைது செய்யப்பட்டார்.
கார்த்தியின் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு, அவர் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனால், 'கார்த்தியும் விரைவில் கைது செய்யப் படுவார்' என, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிபந்தனையுடன் அனுமதி
இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில், கார்த்தி
தாக்கல் செய்த மனு:'டோட்டஸ் டென்னிஸ்' நிறுவனத்தின் இயக்குனராக உள்ளேன். டென்னிஸ் போட்டிகள் நடத்துவது, பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை, நிறுவனம் மேற்கொள்கிறது.
அதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிஉள்ளது. எனவே, பிப்., ௧௫ முதல், ௨௮ வரை, பின், மார்ச், ௨௦ முதல், ௩௧ வரைக்குமான இடைப் பட்ட காலத்தில் பயணிக்க, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:முதல் கட்ட பயணமாக, வெளிநாடு செல்ல, மனுதாரருக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. அவர், வரும், 28ம் தேதி, இந்தியா திரும்பி விட வேண்டும். பயண விபரங்களை, சி.பி.ஐ.,யிடம் அளிக்க வேண்டும்.
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட, நோட்டீசை எதிர்த்த பிரதான வழக்கு விசாரணை, மார்ச், ௧௨க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், இரண்டாவது கட்ட பயணம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து