சென்னை:''உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள, 177.25 டி.எம்.சி., தண்ணீரை, தமிழக விவசாயி களுக்கு பெற்றுத் தர, அரசு முனைப்புடன் செயல்படும்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் கூறியதாவது:காவிரி நீரை பெறுவதில், ஜெ., எவ்வாறெல்லாம் முயற்சி எடுத்தார் என்பதை, எண்ணிப் பார்க்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற விசாரணை, 17 ஆண்டுகளாக நடந்து, 2007ல், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு, முழு அதிகாரம் கிடைக்க, மத்திய அரசிதழில்
வெளியிட வேண்டும் என, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்., - தி.மு.க., அரசிடம், ஜெ., வலியுறுத்தினார்.
மேலும், 'நீர் பற்றாக்குறையாக உள்ளது என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் பங்கீட்டு குழு அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.காங்., - தி.மு.க., கூட்டணி அரசு, 2013 வரை இருந்த போது, ஜெ., பல கடிதங்கள் வழியாகவும், நேரில் சென்றும் வலியுறுத்தினார்; எந்த பலனும் இல்லை.
எனவே, உச்ச நீதிமன்றம் சென்று, சட்டபோராட்டம் நடத்தி, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார். ஒவ்வொரு முயற்சியிலும்,காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற, பல்வேறு சட்டப்
போராட்டங்களை நடத்தி, வெற்றி கண்டார். அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிலுள்ள, சாதக, பாதகங்களை அலசி, அறிக்கையாக தருவோம்.
தமிழகத்திற்கு, 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தண்ணீரை, தமிழக விவசாயிகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில், ஜெ., அரசு முனைப்புடன் செயல்படும்.
தி.மு.க., எந்த காலத்திலும், காவிரி நீரை பெற்றுத் தரவில்லை. வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு, மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சியில் இருந்தபோதும், அரசாணை பெற்று தரவில்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து