தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு கூட்டம் நடந்தது. உறுதி மொழிக் குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார். கலெக்டர் விவேகானந்தன் முன்னிலையில், குழு உறுப்பினர்கள் பொன்முடி, அருண்குமார், எழிலரசன், குணசேகரன், செல்வம், மனோதங்கராஜ், மனோரஞ்சிதம் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர். ஊரக வளர்ச்சி, ஊராட்சி, சுற்றுலா, கல்வி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம், பொதுப்பணித்துறை உட்பட, 20 துறைகளில், 72 கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், 32 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 23 கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினர். ஆய்வில் இணை செயலாளர் சுப்பிரமணியம், எம்.எல்.ஏ.,க்கள், தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கடகத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டத்தை ஆய்வு செய்தனர்.