காவிரி பிரச்னை கடந்து வந்த பாதை

2018-02-15@ 21:32:48

டெல்லி: கர்நாடகாவில் உற்பத்தியானாலும் காவிரி நதி தமிழகத்தில் தான் அதிக தூரம் பாய்கிறது. காவிரி மூலம் தமிழகம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வேளாண்மை,  தொழில்வளம், குடிநீர் ஆதாரம் என பல நன்மைகள் பெற்று வருகிறது. இதற்கு கர்நாடக அரசால் ஏற்பட்ட இடையூறு காரணமாக  உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.  இதையொட்டி காவிரி நதியில் பிரச்னை எப்படி தோன்றியது. அது இதுவரை கடந்து வந்த பாதை என்ன என்பதை காணலாம்.வான் பொய்த்தாலும், தான் பொய்யா காவிரி என்று பாடப்பெற்ற காவிரி, காகம் பறக்க முடியாத அளவுக்கு பரந்து விரிந்த காவிரி , அகண்ட காவிரி என காவிரிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆனால் இன்றைக்கு காவிரியும் பொய்த்து போய்விட்டது. வானும் பொய்த்து போய்விட்டது.எனவே தான் இப்போதெல்லாம் காவிரி 5 மாதங்களுக்கு கூட தமிழகத்தில் ஓடுவதில்லை. மற்ற 7 மாதங்களும் வறண்டுதான் காணப்படுகிறது. முன்பெல்லாம் காவிரி தண்ணீர் இல்லாவிட்டாலும், பாலைவனம் போல மணற்பரப்பு அடுக்கடுக்காக, பார்க்க அழகாகவாது இருக்கும். மணல் கொள்ளையர்கள் அந்த அழகையும் கெடுத்து காவிரி நதியை பூகம்ப பேரிடர் பகுதி போல மேடுகளும், பாதாளங்களுமாக மாற்றி விட்டனர்.
இனி காவிரியின் பிரச்னைகளைப்பற்றி பார்ப்போம்:காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4,186 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. இந்த இடத்தை தலைக்காவிரி என்று அழைக்கிறார்கள். பிறந்த இடம் கர்நாடகமாக இருந்தாலும், காவிரியின் புகுந்த வீடு தமிழகம். எனவே தான் காவிரி இரு மாநிலங்களுக்கும் சொந்தமாகிறது.

கர்நாடகத்தில் 320 கி.மீ. தூரமே பயணிக்கும் காவிரி, தமிழகம், கர்நாடகத்தின் எல்லைகளை பிரிக்கும் எல்லைக்கோடாக 64 கி.மீ. தூரம் பாய்ந்து, தமிழகத்தில் 416 கி.மீட்டர் தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகாரில் வங்க கடலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறது.காவிரி இந்த இடத்தில் புகுந்ததால் தான் இந்த இடம் காவிரி புகும்பட்டினம், காவிரிபூம்பட்டினமாக சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டு இன்று பூம்புகாராகி உள்ளது. சிலப்பதிகாரத்திலேயே காவிரியை பற்றி சொல்லியிருப்பதால் காவிரியின் தொன்மையை புரிந்து ெகாள்ளலாம்.மொத்தம் 800 மீ. தூரம் பாய்ந்தாலும் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் ஓடுகிறது. எனவே தமிழகத்திற்கே அதிக உரிமை உள்ளது.இன்றைக்கு தமிழகத்தில் 15 மாவட்டங்கள் குடிநீர் தேவைக்கு காவிரி தண்ணீரையே ஆதாரமாக கொண்டிருக்கிறது. காவிரி பாயும் மாவட்டங்களில் தொழில் வளம், வேளாண்மை பெருகி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதால் காவிரி தான் தமிழகத்தின் பெரும் முதலாளி என்று கூட சொல்லலாம். அனைவரின் தாகம் தீர்ப்பதால் காவிரி தமிழக மக்களின் வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகிவி–்ட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போக பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு தமிழகத்தில் சுமார் 20 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி நடந்தது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு மறு வருடம் ஜனவரி 28ம் தேதி அைண மூடப்படும். ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே வரையிலான காலத்தை பாசன ஆண்டு என்கிறார்கள்.

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் மழை காலங்களில் காவிரியில் பெருக்கெடுத்து வந்த வெள்ளம் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதத்திற்கு அளவே இல்லை. வினாடிக்கு 4 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்து உள்ளது. இந்த தண்ணீர் இப்போது வந்தால் காவிரி கரையேரம் உள்ள பல நகரங்கள் அழியும் ஆபத்து இன்றும் உள்ளது.எனவே காவிரியில் காட்டாறு போல கட்டுப்ாபடு இன்றி பாயும் வெள்ளத்திற்கு மூக்கணாங்கயிறு போட்டு அதை வருடந்தோறும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காவிரியில் அணை கட்ட சென்னை மாகாணம் விரும்பியது. இதற்கு மைசூர் மாகாணம் ஒத்துக்கொள்ளவில்லை.இந்த நிலையில் தஞ்சை பகுதியின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு காவிரியில் ஏற்படும் சேதங்களுக்கு மைசூர் மாகாணம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினர். இப்படியாக மைசூருக்கும் தமிழகத்துக்கும் காவிரி நீர் தொடர்பான பிரச்னை தொடங்கியது.

1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் இரு மாகாணங்களுக்குமான சிக்கல் துவங்கிவிடுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. ஆனால் அது எந்த பலனையும் தரவில்லை. இந்த நிலையில் தான் மைசூர் மாகாணத்திற்கான ஆங்கிலேய கர்னல் சாங்கி என்பவர் 1866ம் ஆண்டு குடகுமலையில் கிடைக்கும் மழை நீரை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் கர்நாடகத்திலும் அணை கட்ட திட்டம் தீட்டுகிறார்.
இதற்கு ஆரம்பத்தில் சென்னை மாகாண அரசு ஒத்துக்கொண்டது. நாளடைவில், கர்நாடகத்தில் அணை கட்டினால் நமக்கு தண்ணீர் குறையுமே என்ற குரல் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியது. இதனால் கர்நாடகத்தில் அணை கட்டக்கூடாது என சென்னை மாகாணம் கூறியது.இது தொடர்பாக இரு மாகாண நிர்வாகங்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 18-2- 1892ல் ஒரு ஒப்பந்தம் தயரானது. இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் மாகாணம் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். கர்நாடகத்தில்பாசனப் பரப்பை பெருக்குவதற்கும்சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி 1910-ம் ஆண்டு மைசூர் மாகாணம் காவிரியின் குறுக்கே கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள்ளளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது. அதே நேரத்தில் சென்னை மாகாண அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது. இது குறித்தப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப் படாதததால், இந்திய விவகாரங்களுக்கான ஆங்கிலேயே அமைச்சகம் இதில் தலையிட்டது.
அதைத்தொடர்ந்து 1924ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம், இரு மாநிலங்களும் அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியது. அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தம் 50 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் சென்னை மாகாணம் மேட்டூரில் அணை கட்டியது. 1924ல் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் இந்த பணி நடந்தது. 1934 ஜூன் 12ல் இந்த அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது சென்னை கவர்னராக இருந்து ஸ்டான்லி என்பவரது பெயரால் மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்தேக்கம் என பெயரிடப்பட்டது. தற்போது வரை மேட்டூர் அணை தான் தமிழகத்தின் பெரிய அணையாக உள்ளது.(மேட்டூர் அணை கட்டுவதற்காக பல கிராமங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.இதனால் அந்த கிராமத்தில் உள்ள ஆலயங்கள், கோவில்கள் சிதலமடைந்த நிலையில் இன்னும் அணைக்குள் தென்படுகிறது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சாம்பள்ளி என்ற கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்போதைய அணையின் அருகில் குடியமர்த்தப்பட்டனர். பழைய கிராமத்தின் நினைவாக அந்த கிராமத்திற்கு புதுசாம்பள்ளி என பெயரிடப்பட்டது. அந்த கிராமம் இன்றும் புதுசாம்பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.

மேட்டூர் அணை கட்ட வந்த பொறியாளர்களும், மேற்பார்வையிட்ட வெள்ளைக்கார அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அணை அருகே முகாமிட்டு இருந்தனர். சேலம் மாவட்டத்தில் அணை கட்ட வந்த அதிகாரிகள் தங்கியிருந்த இடத்தை சென்னையில் உள்ள அதிகாரிகள் சேலம் கேம்ப் என்றே அழைத்தனர்.ஏனென்றால் மேட்டூர் அன்றைக்கு இத்தனை பிரபலம் இல்லை. இன்றைக்கும் அணை அருகில் உள்ள ஒரு பகுதி சேலம் சேம்ப் என்ற பெயரிலேயே உள்ளது.)
இந்த நிலையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. மொழிவாரி மாநிலங்களும் உதயமானது. கர்நாடக அரசு காவிரியில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அது முழுக்க முழுக்க எங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடியது. காவிரியின் மூலம் தமிழகத்தில் நடைபெறும் விவசாயம், தொழில் கர்நாடகத்தின் கண்களை உறுத்தியது. எனவே தான் வெள்ளைக்காரர்கள் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் அவர்களோடு போயிற்று. அதை நாங்கள் மதிக்கவேண்டியதில்லை
என குரல் கொடுத்தது.இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு வருடத்திற்கு வருடம் குறையத்தொடங்கியது. விவசாயம் மெல்ல சரிவை சந்தித்தது. இப்போது குடிநீருக்கே ஆபத்து என்ற நிலைக்கு வந்து விட்டது.

இது குறித்து தமிழகம் பல முறை கர்நாடகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. எதுவும் ஒரு சமாதான முடிவை காணவில்லை. எனவே தமிழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி. அப்போதைய முதல்வர் கருணாநிதி. அப்போது காங்கிரசுடன் திமுகவுக்கு நெருக்கம் அதிகம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம், வழக்கு வேண்டாம் என பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது.மீண்டும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.1976ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலமும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின், பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892 - 1924 ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். ஆனாலும் இப்போதும் தீர்வு கிடைக்கவில்லை.

விவசாயிகள் முயற்சி
இந்த நிலையில் தான் தஞ்சை விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்கிறார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்னைக்கு ஏப்ரல் 24ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்படுத்தும்படி உத்தரவிட்டதால், 2-6- 1990ம் ஆண்டு  பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.

(தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.)
1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து, 1991ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. எப்போதுமே தீர்ப்புகளை ஏற்காத கர்நாடக இதையும் ஏற்கவில்லை. இன்று வரை ஏற்கவில்லை. வழக்கம் போல தமிழகத்திற்கு எதிரான வன்முறை, கலவரம் அவிழ்த்து விடப்பட்டது. கர்நாடகத்தில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனி கர்நாடகத்தில் தமிழர்கள் வாழவே முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்கள் வாழும் பகுதியில்ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது. கர்நாடக அரசு, காவிரிஇடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.

11-12- 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது. தொடர்ந்து காவிரி பிரச்னை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 1993ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி நீர் தரக்கோரி சென்னையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே உண்ணாவிரதம் தொடங்கினார். பொதுவாகவே காவிரி பிரச்னை தண்ணீர் தட்டுப்பாடான நேரத்தில் தான் அனல் பறக்கும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாவிட்டால் தமிழகம் காவிரியில் தனது உரிமையை கோருவதில்லை.
இந்த நிலையில் அடுத்தடுத்து ஆண்டுகளில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் பெய்த மழை காரணமாக காவிரிப் பிரச்சனையின் வேகம் குறைந்தது. மீண்டும் 1995ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னைவெடிக்கிறது. தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோருகிறது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுகிறது.

வழக்கம் போல இதையும் கர்நாடகா நிராகரிக்கிறது. தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. இதில் உடனடியாக பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். அதில் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு 6 டி.எம்.சி தண்ணீர் தர சம்மதிக்கிறது. 1998ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்கள். இதற்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.
2002ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவிடுகிறது. மீண்டும் கர்நாடகத்தில் கலவரம் வெடித்தது. தமிழகத்திற்கு தண்ணீர்திறப்பதை எதிர்த்து 18-9-2002ல் ஒரு விவசாயி கபினி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படியாக பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் இறுதி தீர்ப்பை அளித்தது. இதன்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் வழங்க வேண்டும். (இதில் 7 டிஎம்சி நீரை தமிழகம் புதுவைக்கு வழங்க வேண்டும்.) கேரளாவுக்கு 30 டிஎம்சி வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கும் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. பிப்ரவரி 12ம் தேதி, தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் கடையடைப்பு நடத்தப்பட்டது. 18-3- 2007ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இனி வருடந்தோறும் 192 டிஎம்சி தண்ணீர் வந்தே தீரும் என தமிழக மக்கள் நம்பினர். இதற்காக தஞ்சையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு 9-3-2013ல் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரசிதழில் வெளியிட்டதற்காக முதல்வருக்கு மேட்டூர் அணை பூங்காவில் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.

அரசிதழில் வெளியிட்ட பிறகும் கர்நாடக அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல இன்று வரை தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தே வருகிறது. இதற்கு காரணம் மத்தியிலும், கர்நாடகத்திலும் அட்சி செய்தவர்களும், செய்கிறவர்களும் தான் என்பது தஞ்சை விவசாயிகளின் குற்றச்சாட்டு.
இதற்கிடையே கர்நாடகா தனது பாசன பரப்பை பல மடங்கு பெருக்கி விட்டது. பல அணைகளையும் கட்டி காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தி வருகிறது. போதாக்குறைக்கு மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டவும் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த  நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஒரு  வருடத்தில் பெறப்படாத நீரை அடுத்த வருடம் கேட்க முடியாது. பற்றாக்குறைக்  காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள  வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நிற்கிறது.தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.இதனைத்தொடர்ந்து கேரளா, புதுச்சேரி அரசுகளும் அப்பீல் செய்தன. இந்த வழக்குகள் தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய் ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது.

கர்நாடகம் சார்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன், ஷியாம் திவான், மோகன் , ஷரத் ஜாவ்ளி வாதிட்டனர். தமிழகம் சார்பில் மூத்த வக்கீர்கள் சேகர் நாப்தே, ராகேஷ் திவிவேதி,  வக்கீல்கள் உமாபதி, சி.பரமசிவம், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.
கேரளா சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தாவும், புதுவை சார்பில் மூத்த வழக்கறிஞர்  நம்பியார் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த விவாதத்தின்போது, காவிரி பிரச்னைக்கு முக்கிய காரணமான, காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என மத்திய அரசை காட்டமாககேட்டார்.  கர்நாடகத்தில் அணை கட்டுவதை ஏன் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கேட்டார். மேற்கண்ட விவாதம் கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி துவங்கி செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிந்தது. அதைத்தொடர்ந்து 4 மாநிலங்களும்  முக்கிய  வாதங்கள், நீர் மேலாண்மை நிபுணர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அந்த தீர்ப்பு நாளை வெளியாகலாம் என தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!